Published : 11 May 2018 07:46 AM
Last Updated : 11 May 2018 07:46 AM

தொழில் வணிகத் துறை சார்பில் திறன் மேம்பாட்டு கட்டமைப்பு பயிற்சி: 700 ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

தமிழ்நாடு அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (இடிஐஐ), தொழில் வணிகத் துறையில் பணியாற்றும் 700 ஊழியர்கள், அதிகாரிகளுக்கான 3 நாள் திறன் மேம்பாட்டு கட்டமைப்புப் பயிற்சியை சென்னையில் நேற்று முன்தினம் (மே 9) தொடங்கியது.

தொழில் துறை ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் விதமாக தகவல் தொடர்புத் திறன், தலைமைப் பண்பு, நிர்வாக மேலாண்மை, இடர்களைக் களைதல், பிரச்சினைகளைக் கையாளுதல், ஒட்டுமொத்த முயற்சி, பொதுமக்களை அணுகும் விதம், சீரிய பணி செய்தல், மின்னாற்றல் கையாளும் திறன் போன்ற பல்வேறு அம்சங்களில் பயிற்சி அளிப்பதே இதன் நோக்கமாகும்.

இத்தகைய பயிற்சிகள் மூலம் மாவட்ட தொழில் மைய அலுவலர்களின் சேவைத் திறனை மேம்படுத்தி, மக்களுக்கு சிறந்த முறையில் பணியாற்ற முடியும்.

இறையன்பு அறிவுறுத்தல்

இப்பயிற்சியை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன முதன்மை செயலாளர், இயக்குநர் வெ.இறையன்பு தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார்.

அவர் கூறும்போது, ‘‘அரசின் திட்டங்கள் சரியான முறையிலும், காலம் தவறாமலும் மக்களுக்கு சென்றடையும் வகையில் அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்.

இப்பயிற்சியின் மூலம் தலைமைப் பண்பு, மக்களின் பிரச்சினைகளை இன்முகத்தோடு உள்வாங்கி அதற்கான தீர்வுகளை வழங்குதல், தகவல் தொடர்புத் திறன்களை மேம்படுத்திக் கொள்ளுதல், விரைந்து செயல்படுதல் போன்ற திறன்களை வளர்த்துக்கொண்டு ஆக்கபூர்வமாக பணியாற்ற வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.

தொழில் வணிகத் துறை இயக்குநரக கூடுதல் ஆணையர் டி.பி.ராஜேஷ், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன கூடுதல் இயக்குநர் ஆர்.வி.சஜிவனா, துணை இயக்குநர் மணிகண்டன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x