Published : 15 May 2018 06:07 PM
Last Updated : 15 May 2018 06:07 PM

தி.நகரில் இளைஞரைத் தாக்கிய விவகாரம்: பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரை வாங்க மறுத்தது ஏன்?-காவல் ஆய்வாளருக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி

 தி.நகரில் தாய் கண் முன்னே மகனை கட்டிவைத்து தாக்கிய போக்குவரத்து காவலர்கள் மீது பாதிக்கப்பட்ட பிரகாஷ் கொடுத்த புகாரை வாங்க மறுத்தது ஏன் என்று  காவல் ஆய்வாளருக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை வடபழனியைச் சேர்ந்த பிரகாஷ் (21) அவரது தாயார் சங்கீதா மற்றும் சகோதரியுடன் தனது வீட்டுக்கு சில பொருட்களை வாங்க கடந்த ஏப்-2-ம் தேதி தி.நகருக்குச் சென்றார். பொருட்களை வாங்கிய பின்னர் தனது தாய், சகோதரியுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும்போது போக்குவரத்து போலீஸார் அவர்களை மடக்கினர்.

'ஏன் ஹெல்மட் போடவில்லை' என்று போக்குவரத்து காவல் அதிகாரிகள் கேட்டனர். பின்னர், 'ஏன் மூன்று பேர் ஒரே வாகனத்தில் ஏன் வந்தீர்கள்' என்று போலீஸார் கேட்டனர். 'வசதி இல்லை என்பதால் மோட்டார் சைக்கிளில் வருகிறோம்' என்று பிரகாஷ் கூறியுள்ளார்.

'வசதி இல்லை என்றால் எதற்கு தி.நகருக்கு ஷாப்பிங் வருகிறீர்கள், மூன்று பேர் ஆட்டோவில் வர வேண்டியது தானே?' என்று பிரகாஷிடம் போலீஸார் கேட்க, அப்போது பிரகாஷுக்கும் மற்ற போலீஸ் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து சமாதானம் பேசிய அவரது தாயாரையும், தங்கையையும் போலீஸ் அதிகாரிகள் ஜெயராமன், ரமேஷ் உள்ளிட்ட மூன்று பேர் தள்ளிவிட பிரகாஷ் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பொதுமக்கள் முன்னிலையில் காவல் அதிகாரிகள் 3 பேர் அந்த இளைஞரை கம்பத்தில் பிடித்துவைத்து கைகளை முறுக்கும் காட்சிகளும், அவரைத் தாக்கும் காட்சிகளும் அப்போது பிரகாஷின் தாயாரும், சகோதரியும் அவரை விட்டுவிடும்படி கதறும் காட்சியும் வைரலானது.

3 அதிகாரிகள் இளைஞர் பிரகாஷை இழுத்துச்செல்வதும், அவரது தாயார் சங்கீதா அவர்களிடம் கெஞ்சுவதும் பின்னர் அதில் ஒரு அதிகாரி அவரைப் பிடித்து தடுத்து தள்ளிவிடும் காட்சிகளை கண்ட பொதுமக்கள் கடுமையான விமர்சனங்களை தெரிவித்தனர்.

தாக்கப்பட்ட இளைஞர் பிரகாஷை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இதே போல் மாநில மனித உரிமை ஆணையமும் பத்திரிகைகளில் வந்த செய்தியை பார்த்து தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது. இது குறித்து ஏப் 18-ம் தேதி இளைஞர் பிரகாஷைத் தாக்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் சுரேஷ் மற்றும் ஜெயராமன் இருவரும் நேரில் விசாரணையில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே தன்னையும் தனது மகனையும் தாக்கி அத்துமீறலில் ஈடுபட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள், புகாரை வாங்க மறுத்த காவல் ஆய்வாளர் பிரபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது 35 லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு பிரகாஷின் தாய் சங்கீதா மனு அளித்தார்

இந்த வழக்கில் ஆஜராகாமல் இருந்த அனைவருக்கும் மீண்டும் சம்மன் அனுப்பினார் நீதிபதி. தாய் தங்கை கண் முன்னே தன்னை கட்டிவைத்து அடித்த போக்குவரத்து காவலர்கள் மீதான புகார் அளித்தும் காவல் ஆய்வாளர் பிரபு வாங்க மறுத்தார் என பிரகாஷ் புகார் அளித்தது குறித்து நீதிபது கேள்வி எழுப்பினார்.

மாம்பலம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் சுயம்புலிங்கம், சுரேஷ், இந்துமதி, பிரபு, சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயராமன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களிடம் பிரகாஷ், சங்கீதா புகார் நகல் வழங்கப்பட்டது. புகார் பற்றி பதிலளிக்க உத்தரவிடப்பட்டு வழக்கு ஜூன் 5-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் காவல் ஆணையர் சார்பில் யாரும் ஆஜராகவில்லை அவர் சார்பில் பதில் அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து காவல் ஆணையருக்கு ஜூன் 5 வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x