

தருமபுரி: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை இரும்புக் கரம் கொண்டு அரசு பாதுகாக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறினார்.
தருமபுரியில் நேற்று நடைபெற்ற தேமுதிக நிர்வாகி இல்லதிருமண விழாவில் பங்கேற்றபிரேமலதா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், முதல்வர் தொகுதியில், மக்கள் நடமாட்டம் மிகுந்தபகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சேலத்தில் அதிமுக நிர்வாகி சண்முகம் கொலை வழக்கில், திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கூறியுள்ளார். அவர் ஏன் முதல்வரை நேரில் சந்தித்து, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து வலியுறுத்தக் கூடாது?
டாஸ்மாக் சரக்கில் `கிக்' இல்லாததால், பொதுமக்கள் கள்ளச் சாராயத்தை நாடுவதாக சட்டப்பேரவையில் அமைச்சரே அறிவிக்கிறார். தரமில்லாத உணவு வழங்கும் உணவகத்துக்கு `சீல்' வைக்கும்அரசு, தரமில்லாத மதுவை வழங்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் `சீல்' வைக்க வேண்டும். தமிழகத்தில் போதைப் பொருட்கள் பயன்பாடு, கனிமவளக் கொள்ளை, மணல் கொள்ளை அதிக அளவில் நடக்கின்றன.
தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும். கனிமவளக் கொள்ளையைத் தடுக்கவும், ரேஷனில் அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அள வுக்கு கிடைத்திடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறினார்.