Published : 08 Jul 2024 05:47 AM
Last Updated : 08 Jul 2024 05:47 AM
தஞ்சாவூர்: ஒரத்தநாடு காசி விஸ்வநாதர் கோயிலிலிருந்து திருடப்பட்டு, அமெரிக்காவின் நியூயார்க் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள வீணாதர தட்சிணாமூர்த்தி சிலையை மீட்க வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் வலியுறுத்தினார்.
தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு நேற்று வந்த பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள பழமையான காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து 2.5 அடி உயரமுள்ள வீணாதர தட்சிணாமூர்த்தி (சிவன்) ஐம்பொன் சிலை, கடந்த 1997-ல் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு காவல் நிலையத்தில் நிலுவையில் உள் ளது.
இந்த சிலை தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளஅருங்காட்சியகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஏலம் விடப்பட்டு, தனிநபரின் கைக்குச் சென்று விட்டால், அவர்கள் சிலையை மறைத்து விடுவார்கள்.
எனவே, தமிழக அரசும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் உடனடியாக செயல்பட்டு, அந்த சிலையை மீட்க வேண்டும். இதற்காக 1997-ல் வழக்கை மேற்கோள்காட்டி, தூதரகத்துக்கு கடிதம் எழுத வேண்டும்.
ரூ.25 கோடி மதிப்பு: இந்தக் கோயிலில் 1958-ல்சிலைக்கு அபிஷேகம் செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படமும், அருங்காட்சியகத்தில் உள்ள சிலையின் புகைப்படமும் மிகத் துல்லியமாக ஒருமித்துக் காணப்படுகின்றன. ஒரத்தநாட்டில் உள்ள பலரின் வீடுகளில் இந்த சிலையின் புகைப்படங்கள் இன்னும் உள்ளன. நியூயார்க்கில் உள்ள சிலையின் மதிப்பு ரூ.25 கோடி இருக்கும்.
மேலும், இக்கோயில் கருவறையின் பின்புற சுவரில் 4 அடி உயரம் கொண்ட கல்தூணில் லிங்கோத்பவர் அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு இருந்தால், அது மிகவும் தொன்மையான கோயிலாக கருதப்படும். இந்த தொன்மையான அமைப்பை, அறநிலையத் துறை அதிகாரிகள் ஆயில் பெயின்ட் அடித்து மறைத்து விட்டனர். இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT