

திருச்சி: ‘தி இந்து’ குழும பதிப்பகம் சார்பில் ‘சமயபுரம்- சக்தியின் புனித பீடம்’ (Samayapuram - The Sacred Seat of Shakti) என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா சமயபுரம் கோயிலில் நேற்று நடைபெற்றது.
திருச்சி அருகே சமயபுரத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில், தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முக்கிய இடத்தைவகிக்கிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிந்து, அம்மனை தரிசித்து செல்கின்றனர். ஆண்டுதோறும் இக்கோயிலில் நடைபெறும் சித்திரை தேர்த் திருவிழா மற்றும் மாசி மாதத்தில் பக்தர்களுக்காக 28 நாட்கள் அம்மன் பச்சைப் பட்டினி விரதம்இருக்கும் நிகழ்வு உள்ளிட்டவை முக்கியத்துவம் வாய்ந்தவை.
‘சமயபுரம்- சக்தியின் புனித பீடம்’ என்ற 190 பக்கங்கள் கொண்டபுத்தகத்தில், 1,200 ஆண்டுகள் பழமையான சமயபுரம் மாரியம்மன் கோயில் வரலாறு, முக்கியஉற்சவங்கள், அன்றாட பூஜைகள்,அபிஷேகங்கள், புனித தீர்த்தங்கள்,அம்மன் குறித்த புராதனக் கதைகள் மற்றும் ஏராளமான வண்ணப் படங்கள் இடம்பெற்றுள்ளன.
சமயபுரம் கோயிலில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், அம்மன் திருவடியில் இந்த புத்தகத்தை வைத்து சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர், திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் முன்னிலையில், நூலாசிரியர் ஜெ.ரமணன் புத்தகத்தின் முதல்பிரதியை தமிழக அரசின் நீர்வளத் துறைச் செயலர் க.மணிவாசனிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில், இணை நூலாசிரியர் விருந்தா ரமணன், சமயபுரம் கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி, ‘தி இந்து’ குழும துணைத் தலைவர் (விற்பனை மற்றும் விநியோகம்) ஸ்ரீதர் அர்னாலா மற்றும் கோயில் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த புத்தகம் வேண்டுவோர் https://publications.thehindugroup.com/bookstore/ என்ற ‘தி இந்து’ ஆன்லைன் ஸ்டோரில் ரூ.2,999 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.