

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் அண்ணன் வீரமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சம்பவம் நடந்த அன்று இரவு 7 மணி அளவில் வீட்டுக்கு அருகில் இருந்த வேணுகோபால் சுவாமி கோயிலில் இருந்தேன். அப்போது திடீரென சத்தம் கேட்டது.
சிலர் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டுவதாக கூச்சலிட்டனர். இதையடுத்து சம்பவம் நடந்த இடத்துக்கு சத்தம் போட்டுக் கொண்டே ஓடிச் சென்றேன். அப்போது எதிர்புறமாக கத்தியுடன் 2 முதல் 3 பேர் ஓடி வந்தனர்.
முதலில் ஒருவர் கத்தியை வீசினார். நான் தப்பித்துவிட்டேன் அதிலிருந்து மீள்வதற்குள் இன்னொருவன் வெட்டினார். நான் குனிந்து கொண்டு ஓடினேன். அப்போது தடுக்கி விழுந்து விட்டேன்.
இதையடுத்து பின்னால் வந்த 3-வது நபர் என் தலையில் வெட்டினார். பின் கீழே விழுந்ததால் என் முதுகிலும் வெட்டினார்.ஆனால் இவற்றை பொருட்படுத்தாமல் தம்பியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மீண்டும் எழுந்து ஓடினேன்.
அங்கு சென்று பார்த்தபோது ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். எழுந்திருப்பா, எழுந்திரு என்று கதறினேன். ஆனால் எழுந்திருக்கவில்லை. மூச்சுவிடும் சத்தம் மட்டும் தான் கேட்டது. எனக்கு மயக்கம் ஏற்பட்டது.
குற்றவாளிகளை சரியாக பார்க்க கூட எனக்கு அவகாசம் கிடைக்கவில்லை. என்னை நோக்கிவந்த கத்தியை மட்டுமே கவனித்துகொண்டிருந்தபடியால் ஆட்களைகவனிக்கவில்லை. கொலையாளிகள் எனக்கு எதிர்புறமாகவே ஓடிவருவார்கள் என எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.