Published : 08 Jul 2024 05:15 AM
Last Updated : 08 Jul 2024 05:15 AM
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52). கடந்த 5-ம் தேதி மாலை மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மறுநாள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் உடல் அங்கிருப்பதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் சென்னை மட்டும் அல்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரண்டு அங்கு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை பெறமாட்டோம் என ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் வட சென்னை காவல்கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், உடலை பெற்றுக் கொள்ள சம்மதித்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம்இரவு 9.45 மணியளவில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து பெரம்பூருக்கு ஆம்ஸ்ட்ராங் உடல் கொண்டு செல்லப்பட்டது. அப்போதும், அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் உடல் எடுத்துச் செல்லப்பட்ட வாகனம் முன்பு அணிவகுத்து சென்றனர்.
கதறிய மக்கள்: பின்னர், ஆம்ஸ்ட்ராங் உடல் இறுதி அஞ்சலிக்காக அவர் வசித்து வந்த பெரம்பூர் பகுதியில் உள்ள பந்தர் கார்டன் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டது. அப்பகுதி மக்கள்,பல்வேறு இடங்களில் இருந்து வந்த கட்சியினர், ஆதரவாளர்கள் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவுகளை கூறி தேம்பி.. தேம்பி.. அழுதனர். பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் நெஞ்சிலும், தலையிலும் அடித்துக் கொண்டு கதறினர்.
ஆம்ஸ்ட்ராங் ஏராளமான மாணவர்களை படிக்க வைத்துள்ளார். மேலும், தொழில் உதவிகளையும் செய்துள்ளார். அவரால் உதவிபெற்றவர்களும் அங்கு திரண்டு கண்ணீர் வடித்தவாறு இருந்தனர். மேலும், அவர்கள் அங்கேயே காலை முதல் நின்றிருந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் பலர் தங்களது கடைகளை தானே முன் வந்து அடைத்து அவர்களும் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இறுதிஅஞ்சலி செலுத்தினர்.
இதுஒருபுறம் இருக்க அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக தங்களது ஆதரவாளர்களுடன் பெரம்பூரில் திரண்டனர். இதனால், பெரம்பூர் பகுதியே ஸ்தம்பித்தது.
இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் மாலை 4.45 மணி அளவில் பெரம்பூரிலிருந்து திருவள்ளூர் மாவட்டம், பொத்தூருக்கு புறப்பட்டது. ஊர்வலத்தின் முன்னும், பின்னும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், பொதுமக்கள், கட்சி பிரமுகர்கள், சினிமாபிரபலங்கள் கண்ணீர் மல்க பேரணியாக நடந்து சென்றனர்.
இரவு 10 மணி அளவில் செங்குன்றத்தை அடுத்த பொத்தூர் ரோஜா நகருக்கு ஊர்வலம் சென்றது. அங்கு உறவினர் லதா என்பவருக்கு சொந்தமானஒரு ஏக்கர் நிலத்தில் (புழல் ஏரிக்கரை) ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு புத்தமத முறைப்படி இறுதிசடங்கு நடைபெற்றது.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்திருந்த 7 புத்த பிட்சுகள் 5 வாசனை திரவங்கள் மூலம் அவரது உடலை தூய்மைப்படுத்தினர். பின்னர், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு வெண்மை நிற ஆடை உடுத்தி சந்தன பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.
தலைவர்கள் இறுதி அஞ்சலி: பகுஜன் சமாஜ் கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அசோக் சித்தார்த், தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி, பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர், கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.
எவ்வித அசம்பாவித சம்பவங்களுக்கு நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பூர் முதல் பொத்தூர்வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டபோலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT