

புதுச்சேரி: புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சிக்குள்ளும், எம்எல்ஏக்களுக்கு மத்தியிலும் பிளவு நீடிப்பதால், கட்சி மேலிட உத்தரவுப்படி பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா நாளை (திங்கள்கிழமை) பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சி அமைத்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வென்றது. புதுவையை ஆளும் அரசில் பாஜகவைச் சேர்ந்த செல்வம் பேரவைத் தலைவராகவும், உள்துறை அமைச்சராக நமச்சிவாயம், குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சராக சாய்சரவணக்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தற்போது பாஜக எம்எல்ஏக்கள், ஆதரவு தரும் சுயேட்சைகள், நியமன எம்எல்ஏ ஆகியோர் தங்களுக்கு பதவி கோரிவந்தனர். மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தங்களுக்கு பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தேர்தலில் பாஜக தோற்றது. அதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் தங்கள் போர்க்கொடியை தூக்கியுள்ளனர். புதுவை சட்டப்பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பாஜக எம்எல்ஏக்களில் 3 பேர் ஒரு பிரிவாகவும், மற்ற 3 பேர் தனியாகவும் உள்ளனர்.
அதிருப்தி எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட் ஆகியோருடன், பாஜகவுக்கு ஆதரவு தரும் சுயேட்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கர், சீனிவாச அசோக் மற்றும் நியமன எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் உள்ளனர். நியமன எம்எல்ஏக்களில் ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் அதிருப்தி எம்எல்ஏக்களோடு சேரவில்லை. இதனால் புதுவை பாஜகவில் பிளவு வெளிப்படையாகியுள்ளது. கூட்டணியிலுள்ள பாஜக மற்றும் ஆதரவு சுயேட்சைகள் ஏழு பேர் போர்க்கொடி தூக்கினர்.
அதில் பாஜக ஆதரவு சுயேட்சை அங்காளன், முதல்வர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தார். ஆளும் அரசில் லஞ்சம் அதிகரிப்பதாகவும், இடைத்தரகர்கள் செயல்பாடு அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து 7 பேரும் டெல்லி சென்று தேசியத்தலைவர் நட்டா, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், கட்சி அமைப்பு செயலர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்தனர்.
கட்சியிலும் விரிசல்: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது புதுச்சேரி பாஜக தலைவராக சாமிநாதன் இருந்தார். ஆட்சியில் முதல்முறையாக பாஜக அங்கம் வகித்தது. அவர் அதிக ஆண்டுகள் தலைவராக இருந்ததால், பாஜக மாநிலத் தலைவராக மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்றது. பாஜக கட்சிக்குள் மாநிலத் தலைவருக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கியுள்ளன.
இதனால் போராடியோர் நீக்கப்படும் சூழல் ஏற்படத் தொடங்கியுள்ளது. வெளிப்படையாகவே முன்னாள் தலைவர், தற்போதைய தலைவரை விமர்சிக்க தொடங்கியுள்ளார். இதனால் கட்சியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆளும் அரசின் கூட்டணியை ஆதரிக்கும் பாஜக எம்எல்ஏக்கள், கட்சி அமைப்புக்குள் பிரச்சினை உருவானது.
இந்நிலையில் புதுச்சேரி பாஜக கட்சியின் பொறுப்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த நிர்மல்குமார் சுரானா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து கட்சித்தலைமை சுரானாவிடம், பாஜக எம்எல்ஏக்கள் புகார், கட்சிக்குள் நிலவும் வேறுபாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உத்தரவிட்டது.
இதுதொடர்பாக பாஜக தரப்பில் கூறுகையில், “புதுச்சேரிக்கு நிர்மல் குமார் சுரானா வந்து நாளை காலை 10.30 மணிக்கு கட்சி எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். அதைத்தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார். இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டனர்.