Published : 07 Jul 2024 08:59 AM
Last Updated : 07 Jul 2024 08:59 AM
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் மிதமான சாரல் பொழிந்து வருகிறது. திற்பரப்பு அருவி மீண்டும் களைகட்டி உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
குமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை பரவலாக பெய்துவந்த நிலையில், அணைகள் நிரம்பி வழிகின்றன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் வெள்ள அபாய நிலையை எட்டி, தண்ணீர் நிரம்பியதால் கடந்த வாரம் உபரிநீர்அதிகமாக திறந்து விடப்பட்டிருந்தது. இதனால் கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு, திற்பரப்பு அருவி, பரளியாறு, பழையாறு, வள்ளியாறு போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக, திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால், அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக மழை நின்று வெயில் அடிக்கிறது. மேலும், அவ்வப்போது சாரல் மழை பொழிந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.49 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 464 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 303 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.62 அடி உள்ள நிலையில், அணைக்கு 355 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 360 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. சிற்றாறு ஒன்று அணையில் 16.4 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 139 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
அணைகளில் இருந்து உபரிநீர் நிறுத்தப்பட்டதால் திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் திற்பரப்பு அருவிப் பகுதி களைகட்டியுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். குமரி மாவட்டம் முழுவதும் நேற்று குளிர்ந்த தட்பவெப்ப நிலை நிலவியது. அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 12 மி.மீ. மழை பதிவானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT