விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே 800 ஆண்டுக்கு முற்பட்ட சாமுண்டி சிற்பம் கண்டெடுப்பு

சாமுண்டி சிற்பம்
சாமுண்டி சிற்பம்
Updated on
1 min read

விருதுநகர்: திருச்சுழி அருகே 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சாமுண்டி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சோலாண்டி கிராமத்தில், பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர்களான புரசலூர் ரமேஷ், அருப்புக்கோட்டை ஸ்ரீதர் மற்றும் பேராசிரியர் தாமரைக்கண்ணன் ஆகியோருக்கு, அப்பகுதியைச் சேர்ந்த ஞானதேசிங்கன், பாலசுப்பிரமணிய பிரபு ஆகியோர் பழமையான சிலை இருப்பதாக தெரிவித்தனர்.

அங்கு சென்று ஆய்வு செய்தபோது, அது 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சாமுண்டி சிற்பம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

சப்தமாதர்களில் ஒருவராக சாமுண்டி கருதப்படுகிறார். இவர் ருத்ரனின் அம்சம். தற்போது நாங்கள் கண்டறிந்த சிற்பம் 3 அடி உயரத்தில், 4 கரங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. 4 கரங்களில் சூலம், உடுக்கை, கபாலம், பாம்பு உள்ளன.

மார்பில் கபால மாலையுடனும், மேலாடை இன்றியும், கீழாடை மட்டும் அணிந்தும், ஒரு காலைமடக்கி மற்றொரு காலை தொங்கவிட்டு சுகாசனக் கோலத்தில் அமர்ந்த நிலையிலும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

மேலும், தலைப்பகுதி கிரீடம் தரித்தும், கிரீடத்துக்கு பின்புறம் தீ ஜ்வாலையும் காணப்படுகிறது. சிற்ப வடிவமைப்பை வைத்துப்பார்க்கும்போது 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட, பிற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in