Published : 07 Jul 2024 04:02 AM
Last Updated : 07 Jul 2024 04:02 AM
சென்னை: இந்தியையோ அல்லது சம்ஸ்கிருதத்தையோ எந்த வடிவிலும் தமிழகத்துக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் துரைமுருகன் உறுதிபட தெரிவித்தார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் பகுதியில் நேற்று நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டதிமுக வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். திமுக சட்டத்துறை கழகச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தலைமை வகித்தார்.
உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘இந்தமூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கும் வாயில் நுழைய முடியாத அளவுக்கு சமஸ்கிருதத்திலும், இந்தியிலும் பெயர் சூட்டியுள்ளனர். கொஞ்சம், கொஞ்சமாக இந்தியைதிணித்து விடலாம் என பாஜக அரசுநினைக்கிறது. ஆனால் இந்தியையோ, சம்ஸ்கிருதத்தையோ எந்த வடிவிலும் உள்ளே நுழைய விடமாட்டோம்’’ என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வாழ்த்திப் பேசும்போது, ‘‘இந்த புதிய சட்டங்களால்வழக்கறிஞர்கள், காவல்துறையி னர், சட்ட மாணவர்கள், நீதிபதிகள்,பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்படுவர். சட்ட ஆணையத்தை புறக்கணித்துவிட்டும், எதிர்க்கட்சியினரை வெளியேற்றி விட்டும் இந்த புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளனர். அரசியல் சாசனத்துக்கு முரணான இந்த புதியசட்டங்களை உடனடியாக நிறுத்திவைத்து, சட்ட ஆணையத்துக்கு அனுப்பி வைத்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பால கிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’ என்.ராம், திமுக எம்பி-க்கள் பி.வில்சன், கிரி ராஜன், மூத்த வழக்கறிஞர் விடுதலை, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன், திமுக எம்எல்ஏ இ.பரந்தாமன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். மாலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்.பி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT