Published : 14 May 2018 09:22 AM
Last Updated : 14 May 2018 09:22 AM

திறந்தவெளியில் அசுத்தம் செய்வதை தடுக்க ரூ.7 கோடியில் 479 புதிய கழிவறைகளை அமைக்க திட்டம்: தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகரப் பகுதியில் திறந்தவெளியில் அசுத்தம் செய்வதை தடுக்க, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.7 கோடியில் 479 புதிய கழிவறைகளை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வரும் 2019-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிகளும் திறந்தவெளி யில் மலம் கழித்தல் இல்லாத உள்ளாட்சிகளாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அதற்கு தேவையான நிதியும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டு வரு கிறது. அந்த நிதியைக் கொண்டு மாநிலம் முழுவதும் தனி நபர் இல்ல கழிவறைகள், பொது பயன்பாட்டு கழிவறைகள் கட்டப்பட்டு வருகின்றன.

அவ்வாறு தூய்மை இந்தியா திட்ட நிதியில் சென்னை மாநகராட்சி நிர்வாகமும் பல்வேறு இடங்களில் புதிய கழிவறைகளைக் கட்டியுள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டு களையும் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத வார்டுகளாக கடந்த பிப்ரவரி மாதம் மாநகரட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. மத்திய அரசு பிரதிநிதிகளும் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து, திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத நகரமாக சென்னையை அங்கீகரித்தது. இந்த அங்கீகாரம் 6 மாதங்கள் மட்டுமே செல்லுபடியாகும். அதாவது வரும் ஜூலை மாதம் வரை செல்லும் அதன் பின்னர், மீண்டும் மத்திய அரசு பிரதிநிதிகள் ஆய்வு செய்து அங்கீகரிக்க வேண்டும்.

அதனால், திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத நகரம் என்ற அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் விதமாக, பொதுமக்கள் கழிவறைகளை எளிதில் அணுக வசதியாக மேலும் பல இடங்களில் புதிய கழிவறைகளைக் கட்ட சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட் டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறிய தாவது:

சென்னை மாநகராட்சியில் தற்போது சுமார் 1200 அமைவிடங்களில் 9 ஆயிரத்து 200 இருக்கைகளைக் கொண்ட கழிவறைகள் பயன்பாட்டில் உள்ளன. பொதுமக்களுக்கு உரிய வசதிகள் செய்துக் கொடுத்தால் மட்டுமே, அவர்கள் திறந்தவெளியில் மலம் கழிக்காமல் இருப்பார்கள். அதனால் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பொதுமக்கள் வசிப்பிடங்களுக்கு மிக அருகில் கூடுதலாக கழிவறைகளைக் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அதன்படி, ரூ.6 கோடி செலவில், சென்சார் வசதிகள், தானாக நீர் ஊற்றி சுத்தம் செய்யும் வசதிகளைக் கொண்ட 120 நவீன கழிவறைகள், 159 சாதாரண கழிவறை கள் என மொத்தம் 279 கழிவறைகளை அமைக்க இருக்கிறோம்.

மேலும் ரூ.1 கோடி செலவில் 59 அமைவிடங்களில் தற்காலிகமாக 200 கழிவறைகளை அமைக்க இருக்கிறோம். இந்த கழிவறைகளைப் பயன்படுத்துவதின் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x