Published : 19 May 2018 08:37 AM
Last Updated : 19 May 2018 08:37 AM

மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்: பள்ளி கல்வித்துறை திடீர் உத்தரவு

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம் செய்தும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளை ஆய்வு செய்து கண்காணிக்க 32 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், 67 மாவட்ட கல்வி அதிகாரிகள், 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், 836 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், ஓர் ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆய்வாளர் உள்ளனர்.

நிர்வாக அமைப்பு மாற்றம்

ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் அதி கார வரம்பில் வரும் அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்வது இயலாத காரியம். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்படுவதுடன் கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரமும் அளிக்கப்படுகிறது.

அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளிகளையும் அதாவது மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அனைத்து தனியார் பள்ளிகளையும் ஆய்வு செய்வர். அதேபோல், மாவட்ட கல்வி அதிகாரிகளும் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளிகளையும் ஆய்வு செய்வர்.

மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பதவிகள் மாவட்ட கல்வி அதிகாரி பதவிக்கு இணை யான பதவியாக இருப்பதால் அந்தப் பதவிகள் மாவட்ட கல்வி அதிகாரி பதவியாக மாற்றப்படும்.

உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவி, வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம் செய்யப்படும். வட்டார கல்வி அதிகாரிகள் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மட்டுமின்றி தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளிகளையும் (மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள்) ஆய்வு செய்து கண்காணிப்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x