Published : 02 May 2018 12:41 PM
Last Updated : 02 May 2018 12:41 PM

பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்: ஜெயக்குமார்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என, மீன்வளத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் தன் தந்தை மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் 17 வயது மாணவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன் மாணவர் எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என எழுதப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அபோது பேசிய அமைச்சர், “பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது தான் தமிழக அரசின் ஒரே குறிக்கோள். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. அதனால் தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடினார். அதன்பிறகு தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி 500 மதுக்கடைகளை மூடினார்.

மது பழக்கம் ஒரு சமூக பிரச்சனை. மது அருந்துபவர்கள் தானாக திருந்துவதை விட வேறு எந்த வகையிலும் இந்தப் பழக்கத்தை ஒழிக்க முடியாது. குடி பழக்கத்தால் ஒரு குடும்பம் எந்த வகையில் பாதிக்கும் என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகள் ஓரளவுக்கு கைகொடுக்கிறது.

ஆனால், தற்கொலை இதற்கு எந்த வகையிலும் தீர்வாகாது. மாணவர் தற்கொலை செய்துகொண்டது துயரமானது, துரதிருஷ்டவசமானது. மதுவை ஒழித்துவிட்டால் பிற மாநிலங்களில் இருந்து சாராயம் வருவதும், கள்ளச்சாராயம் புழக்கமும் பெருகும்.

மதுவை ஒழிக்க படிப்படியாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x