பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ஜவாஹிருல்லா கண்டனம்

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ஜவாஹிருல்லா கண்டனம்
Updated on
1 min read

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை ஆறு பேர் கொண்ட கும்பல் அவரது இல்லம் அருகில் கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த படுகொலைக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகச் சளைக்காமல் களப்பணி செய்தவர் ஆம்ஸ்ட்ராங். அறிவாற்றல் மிக்க சிறந்த ஆளுமை. எனது பாசமிக்க நண்பராக விளங்கியவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது உறவினர்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படுகொலைக்குக் காரணமானவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை அளிக்க வேண்டும் எனக் கோருகிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஆம்ஸ்ட்ராங் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீஸார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in