Published : 25 May 2018 11:17 AM
Last Updated : 25 May 2018 11:17 AM

தூத்துக்குடியில் இருந்து வெளியேறும் எண்ணம் இல்லை: ஸ்டெர்லைட் திட்டவட்டம்

தூத்துக்குடியில் ஓயாத போராட்டம், உயிர்ப்பலி என கடந்த மூன்று நாட்களில் நடந்த நிகழ்வுகள் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை அரசு மூடியுள்ளது.

இந்நிலையில் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த ஸ்டெர்லைட் நிறுவன சிஇஓ பி.ராம்நாத்,வெளியில் இருந்து ஊடுருவிய சில கலவரக்காரர்களே இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் என்கிறார். அதேவேளையில், ஆலையை தொடர்ந்து நடத்த தங்கள் சட்டப்போராட்டம் ஓயாது தொடரும் எனவும் உறுதிபடக் கூறுகிறார்.

முதல் 100 நாட்கள் போராட்டம் அமைதியாகவே நடந்தது. மே 22-ல் அப்படி என்னதான் நடந்தது?

மே 22-ம் தேதி போராட்டம் குறித்து சமூக ஊடகங்கள் வாயிலாக போராட்டக்காரர்கள் போதிய அளவிலான எச்சரிக்கையைக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

வெறுப்பை உமிழும் வகையில் சமூகவலைதளங்களில் நிறைய பதிவுகள் உலாவந்தன. ஸ்டெர்லைட் ஆலை பற்றி எரிவதுபோல் ஆங்காங்கே போஸ்டர்கள் தொடர்ந்து ஒட்டப்பட்டு வந்தன. காவல்துறையினரும், துணை ஆட்சியரும் போராட்டக்காரர்களுடன் சமரசம் பேச அழைப்பு விடுத்திருந்தனர் என்பதை நாங்கள் ஊடக செய்தி வாயிலாகவே தெரிந்து கொண்டோம்.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒரு தரப்பு ஒப்புக்கொண்டிருந்தாலும். மற்றொரு தரப்பு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்தான் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. அதன்பின்னர் நடந்த சம்பவங்கள் எல்லாம் துரதிர்ஷ்டவசமானவை.

இருப்பினும், துப்பாக்கிச் சூடு நிச்சயமாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டை தவிர்ப்பது குறித்து காவல்துறையினரும் மாவட்ட நிர்வாகமுமே திட்டமிட்டிருக்க வேண்டும்.

எங்கள் வளாகத்துக்குள் எங்கள் சொந்த மக்கள் மீது நடந்த வன்முறைக்கு நாங்கள் வருந்துகிறோம். எங்களுக்குச் சொந்தமான 15 முதல் 20 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

டீசல் ஜெனரேட்டர் முழுவதுமாக நாசமாக்கப்பட்டுள்ளது. நல்லவேளை போராட்டக்காரர்கள் குடியிருப்புகளுக்குள் நுழையவில்லை. அதற்காக நன்றி சொல்கிறேன்.

அதேபோல் இதுநாள் வரை ஆலை மீது எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை என்பதற்கும் நாங்கள் நன்றி சொல்லிக்கொள்கிறோம். இன்னும் சில நாட்களில் எல்லாம் சீரடையும் என நாங்கள் நம்புகிறோம். நல்லதையே எதிர்நோக்கிவுள்ளோம்.

ஆலை விரிவாக்கத்துக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து ஆலை விரிவாக்கம் குறித்து மக்கள் கருத்து கேட்கப்படவில்லை என்ற சர்ச்சை குறித்து?

நீதிமன்றத்தின் அந்த உத்தரவானது ஆர்.பாத்திமா என்பவரின் அவசர மனு மீது வழங்கப்பட்டதாகும். எங்களது கருத்துகளை முன்வைக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

ஆலை விரிவாக்கத்துக்கு சிப்காட் நிலம் ஒதுக்கியது. இரண்டாவது யூனிட்டுக்கான நிலம் 2005-ல் கொள்முதல் செய்யப்பட்டது.  ஆலை பயன்பாட்டுக்காக 2006-க்கு முன் பெறப்பட்ட நிலங்கள் தொடர்பாக மக்கள் கருத்து கேட்க தேவையில்லை.

அதனாலேயே நாங்கள் மக்கள் கருத்து கேட்காமல் நேரடியாக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு விண்ணப்பித்து தடையில்லா சான்றிதழ் வாங்கினோம்.

ஆனால், இப்போது எல்லாவற்றையும் மாற்றி பேசுகிறார்கள். சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையை அணுகவிருக்கிறோம். இப்போது ஆலையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுவருவதால் அரசாங்கம் மின்விநியோகத்தைத் துண்டிருப்பதால் பாதிப்பில்லை.

ஜூன் 6-ம் தேதி வழக்கு தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது என்ன மாதிரியான விஷயங்கள் நடைபெறுகின்றன என்பதைப் பொறுத்து நாங்கள் அடுத்தகட்ட முடிவை எடுப்போம்.

களத்தில் போராடியவர்கள் யார்? ஏன் அவர்கள் ஆலையை மூட நிர்பந்திக்கிறார்கள்?

எங்களது ஆலை, பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் எவ்வித அசம்பாவதிமும் நடக்கவில்லை. இப்போது இந்தப் போராட்டங்கள் எல்லாம் திடீரென எங்கிருந்தோ உருவாகுகின்றன. அதனால்தான், இந்தப் போராட்டங்களின் பின்னணியில் ஏதோ தூண்டுதல் இருக்கிறது என நாங்கள் நம்புகிறோம்.

பொதுமக்கள் அவ்வளவு சாதாரணமாக இப்படி ஆவேசப்படமாட்டார்கள். யாரோ எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றி வளர்த்துள்ளார்.

இதன் பின்னணியை யாராவது அறிந்து சொல்ல வேண்டும். ஏனெனில், இது மிகவும் முக்கியமான பிரச்சினை.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மட்டும் ஆலை நிர்வாகம் ரூ.500 கோடிக்கு மேல் முதலீடு செய்திருக்கிறது. எல்லா விதிமுறைகளையும் நாங்கள் ஒழுங்காக பின்பற்றுகிறோம்.

மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தொடர்ந்து மாதிரிகளை சேமித்து அத்தனையையும் ஆவணப்படுத்தி வைத்துள்ளது.

அண்மைகாலமாக நிறைய என்ஜிஓக்கள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களது செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் சில என்ஜிஓக்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து நிறைய நிதி வருகிறது. அந்த நிதியெல்லாம் இத்தகைய வன்முறைகளுக்கு திருப்பிவிடப்படுகின்றன.

இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு என நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?

இந்தத் தருணத்தில் இப்பிரச்சினைக்கு சட்டபூர்வமாக மட்டுமே தீர்வு காண முடியும்.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் மாநிலத்தில் தொழில் முதலீட்டைப் பாதிக்கும் என நினைக்கிறீர்களா?

2015-ல் உலக தொழில் முதலீட்டு மாநாடு நடைபெற்றது. அப்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது நாங்கள் எந்தப் புரிந்துண்ர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடாவிட்டாலும் இரண்டாவது யூனிட்டை ஆரம்பிக்க நாங்கள் தயாராக இருந்தோம்.

மதுரை - தூத்துக்குடி பகுதியை மேம்படுத்த அரசு சில நல்ல வியூகங்களை வைத்திருந்தது. இதற்காகவே தென்மாவட்டங்களில் குறைந்த விலையில் நிலம், வரிச் சலுகை என நிறைய சலுகைகளை அரசு அறிவித்தது. அப்படி அரசு ஏற்படுத்திய அத்தனை முன்னெடுப்புகளும் இத்தகைய போராட்டங்களால் காணாமல் போய்விடும்.

ஒருவேளை பிரச்சினைக்கு தீர்வே கிடைக்கவில்லை என வைத்துக்கொள்ளுங்கள். அப்போது ஆலையை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து பரிசீலிப்பீர்களா?

அப்படி ஒரு யோசனை இதுவரை எங்களுக்கு வரவில்லை. 20 வருடங்களுக்கு முன்னதாக இந்த ஆலையை அமைப்பதற்காகவே நாங்கள் தூத்துக்குடிக்கு வந்தோம். இங்கு ஆலையை நிறுவியதற்கு காரணம் இருக்கிறது. அந்தக் காரணம் இன்னும் மாறவில்லை. அதனாலேயே இரண்டாவது ஆலை அமைக்க வேறு இடங்கள் கிடைத்தும் நாங்கள் தூத்துக்குடியைவிட்டுப் போகவில்லை. அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இங்கிருந்து வேறு எங்கும் செல்லமாட்டோம்.

இந்த சம்பவத்துக்குப் பின் நிறுவனத்தின் மீது பதிந்துள்ள எதிர்மறை பார்வையை எப்படி சீர்செய்வீர்கள்?

பல ஆண்டுகளாகவே ஒவ்வோரு சனிக்கிழமை கிராமவாசிகளை அழைத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்களது கேள்விகளுக்கு உரிய பதில் அளித்து வருகிறோம். அண்மைகாலமாக எதிர்ப்புக் குரல் ஓங்கியபோதுகூட நாங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஆலையைச் சுற்றிப் பார்க்குமாறு அழைப்புவிடுத்தோம். ஆனால், அவர்கள் யாரும் வரவில்லை. மக்களின் அச்ச உணர்வைத் தணிக்கவே நாங்கள் விரும்புகிறோம். மக்களிடம் மனம்விட்டு பேசவும் தயாராக இருக்கிறோம்.

- தமிழில்: பாரதி ஆனந்த்

“ஒரு வீட்டை நிர்வகிக்கவே கஷ்டமாக இருக்கும்போது, நாட்டை நிர்வகிப்பது எவ்வளவு கஷ்டமாக இருக்கும்?” - விஜய் ஆண்டனி கேள்வி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x