ரூ.822 கோடி குத்தகை பாக்கி: உதகை குதிரைப் பந்தய மைதானத்தை கையகப்படுத்தியது வருவாய் துறை

உதகை குதிரை பந்தய மைதானத்தை வருவாய்த் துறையினர் கையகப்படுத்தினர்
உதகை குதிரை பந்தய மைதானத்தை வருவாய்த் துறையினர் கையகப்படுத்தினர்
Updated on
1 min read

உதகை: வருவாய்த்துறைக்கு ரூ.822 கோடி குத்தகை தொகை செலுத்தாததால், உதகை குதிரை பந்தய மைதானத்தை வருவாய்த்துறை இன்று (ஜூலை 5) கையகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க இந்த மைதானம் தோட்டக்கலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகையின் மையப்பகுதியில் 52.344/16 ஏக்கர் நிலம் மெட்ராஸ் ரேஸ் கிளப் என்ற நிறுவனத்துக்கு 1978-ம் ஆண்டு முதல் அரசால் குத்தகைக்கு வழங்கப்பட்டது. ஆனால், அந்த நிறுவனமானது 2001-க்கு பிறகு குத்தகை தொகையை செலுத்தாமல் இருந்து வந்தது.

இதுதொடர்பாக அரசு மூலம் அறிவிப்பு வழங்கப்பட்டும் இதுவரை குத்தகை தொகையை செலுத்தவில்லை. இதனிடையே, மெட்ராஸ் ரேஸ் கிளப் நிறுவனத்தினர் இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், குத்தகை தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் அல்லது நிலத்தை அரசே திரும்ப எடுத்து பொது பயன்பாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

அதனடிப்படையில் உதகை வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ் மற்றும் உதகை வட்டாட்சியர் சரவணன் கண்ணன் தலைமையில் வருவாய்த் துறையினர் வெள்ளிக்கிழமை காலையில் குதிரை பந்தய மைதான நிலத்தை காவல் துறை உதவியுடன் கையகப்படுத்தினர்.இது குறித்து கோட்டாச்சியர் மகாராஜ் கூறும் போது, “குதிரைப் பந்தய மைதானம் அரசுக்கு ரூ.822 கோடி குத்தகை பாக்கி செலுத்த வேண்டும். மாற்றியமைக்கப்பட்ட குத்தகை தொகையை செலுத்த முடியாது என மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

குத்தகை தொகையை செலுத்த மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் கால அவகாசம் கோரியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் குத்தகையை உடனடியாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியது. மேலும், குத்தகை தொகையை செலுத்தாத பட்சத்தில் நிலத்தை அரசு உடனடியாக கையகப்படுத்தவும் உத்தரவிட்டது.

அதன்படி, இன்று (ஜூலை 5) அரசு மீட்டெடுத்த 52.344/16 ஏக்கர் நிலம், நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறைக்கு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று தோட்டக்கலைத் துறையினர் மேற்படி நிலத்தில் பூர்வாங்க பணியை தொடங்கியுள்ளனர்” என்றார்.

தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பபிதா கூறும் போது, “குதிரைப் பந்தய மைதானத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க நிலம் தோட்டக்கலைத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. பூங்கா அமைக்கும் பணி தெடாங்கியுள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in