மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் உண்ணாவிரத போராட்டம்

ஸ்டாலின்
ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து நாளை (சனிக்கிழமை) திமுக சட்டத் துறை சார்பில் மாபெரும் உண்ணாவிரத அறப் போராட்டம் நடைபெறவிருப்பதாக திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்திய திருநாட்டின் நீதி பரிபாலனத்திற்கும் - மாநில சுயாட்சிக்கும் - மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது என்பதோடு, இச்சட்டங்கள் ஜனநாயக நாடாக திகழும் நம் இந்திய திருநாட்டினை, ‘காவல்துறை ஆட்சி நாடாக" மாற்றிவிடும் அரசியல் அமைப்பிற்கு எதிரான - ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்றிய பாசிச பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறையின் சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளது.

திமுக சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., தலைமையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சார்பில் நாளை (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் மாநில, மாவட்ட, நீதிமன்ற திமுக. வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் - கழக வழக்கறிஞர்கள் மற்றும் கழக முன்னணியினர் - தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in