Published : 28 Aug 2014 12:00 AM
Last Updated : 28 Aug 2014 12:00 AM

திருச்சியில் போலீஸ் தம்பதி தீக்குளிப்பு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திருச்சியில் பணியாற்றிவரும் போலீஸ் தம்பதி புதன்கிழமை தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் சேகர்(44). இவருக்கு மகேஷ்வரி, விஜயலட்சுமி என 2 மனைவிகள் உள்ளனர். திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில் தலைமைக் காவலராக உள்ள இவர் தனது 2-வது மனைவி விஜயலட்சுமியுடன் கொட்டப்பட்டில் வீடு எடுத்து வசித்து வந்தார்.

காதல் தம்பதி

காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. புதன்கிழமை அதிகாலையிலும் அவர்களுக்கிடையே தகராறு நடந்துள்ளது. இதில் மனமுடைந்த இருவரும் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக தெரிகிறது.

தீ உடல் முழுவதும் பரவியதால் இருவரும் போட்ட கூச்சலைக் கேட்டு வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த சேகரின் மகன், மகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து தீயை அணைத்து இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முரண்பட்ட வாக்குமூலம்

தீக்குளிப்புக்கான காரணம் குறித்து இருவரிடமும் போலீஸார் வாக்குமூலம் பெற்றனர். அதில் இருவரும் ஒருவருக்கொருவர் முரண்பட்ட தகவலை தெரிவித்துள்ளதாகவும், இதனால் தீக்குளிப்புக்கான காரணம் குறித்து அறிந்துகொள்வதில் சிக்கல் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பொன்மலை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி குற்றவியல் நடுவர் மன்ற (எண் 2) மாஜிஸ்திரேட் ராஜாராம், தீக்குளித்த தம்பதியிடம் ரகசிய வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x