Published : 05 Jul 2024 07:21 AM
Last Updated : 05 Jul 2024 07:21 AM
திருச்சி: நீட் தேர்வு குறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட தமிழக அரசு தயங்குவது ஏன்என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் அத்துமீறலையும் மீறி பாமக வெற்றிபெறும். இந்த தேர்தலில் 3 அல்லது 4-வது இடத்துக்கு சென்றுவிடுவோம் என்ற அச்சத்தில்தான், அதிமுக போட்டியிடவில்லை. திமுக என்ற ‘ஏ’ டீம் வெற்றிபெற, அதிமுக என்ற ‘பி’ டீம் போட்டியிடவில்லை.
நீட் தேர்வு குறித்து அரசியல் கட்சித் தலைவராக விஜய் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவரது கருத்து, எங்கள் கட்சி வளர்ச்சிக்குப் பயன்படும். பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே நீட்டை எதிர்க்கிறார்கள்.
நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த திமுக அரசு, நீட் தேர்வுக்கு முன், நீட் தேர்வுக்கு பின் எவ்வளவு பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தார்கள் என்றவெள்ளை அறிக்கையை வெளியிடத் தயங்குவது ஏன்? மாநிலஅரசின் கல்விக் கொள்கையில் அரசியலுக்காக சில விஷயங்களை கூறிவிட்டு, மத்திய அரசின் கல்விக் கொள்கையை அப்படியே காப்பி அடித்துள்ளனர்.
தேசிய கல்விக் கொள்கையில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தைக் கொண்டுவந்தால், அதைகுலக்கல்வித் திட்டம் என்கின்றனர். ஆனால், மாநில கல்விக் கொள்கையில், மீனவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு படகு மற்றும் கடல் சார்ந்த விஷயங்கள் கற்றுக்கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை குலக்கல்வி என்று ஒப்புக் கொள்வார்களா?
அதேபோல, உருது பள்ளிகள் அதிகம் ஆரம்பிக்க வேண்டும்என்றும் மாநிலக் கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உருது திணிப்பு இல்லையா?
அதிமுக அழிவுக்கு ஜெயக்குமார்தான் முதல் காரணம். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமியும், ஜெயக்குமாரும் பேசப் பேச எங்களுக்கு வாக்குகள் அதிகரிக்கின்றன.
கள்ளச் சாராய உயிரிழப்பு விவகாரத்தில் என் மீது அவதூறு பரப்பிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரி வரும் 9-ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.
கோவை, நெல்லை மேயர்களை மட்டும் நீக்கினால் போதாது.எல்லா மேயர்களையும் நீக்க வேண்டும். அப்போதுதான் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகம் சிறப்பாக இருக்கும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT