

சென்னை: பாலிடெக்னிக் கல்லூரி விடுதி கேன்டீனின் உணவருந்திய 8 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில், சுகாதாரமின்றி இருந்த கேன்டீனுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை வேப்பேரியில் உள்ள அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துவந்த 8 மாணவர்களுக்கு நேற்றுமுன்தினம் திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
அதேபோல 10 மாணவர்களுக்கு காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இது தொடர்பாக மாநகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே கல்லூரி விடுதியின் கேன்டீனில் பாதுகாப்பு வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை என்றும், முறையாகப் பராமரிக்கப் படுவதில்லை என்றும் புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர், வேப்பேரி அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியின் கேன்டீனில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மாணவர்களுக்கு உணவு வழங்கப்படும் கேன்டீன் முறையான பராமரிப்பின்றியும், சுகாதாரமின்றியும் மோசமான நிலையில் இருப்பது தெரியவந்தது.
மேலும் கேன்டீனுக்கு பயன்படுத்தப்படும் நீர் அசுத்தமாக இருந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியின் கேன்டீனுக்கு உடனடியாக சீல் வைத்தனர்.
கேன்டீன் முழுவதுமாக சீரமைக்கப்பட்டு, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே,மீண்டும் கேன் டீன் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.