

சென்னை: ‘கோட்’ திரைப்படத்தின் எதிர்ப்பை சமாளிக்கவே தவெக தலைவர் விஜய், நீட் எதிர்ப்பை கையில் எடுத்திருப்பதாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வுக்கு எதிராக நடிகரும், தவெக தலைவருமான விஜய் பேசியிருப்பது உண்மையும், புரிதலும் இல்லாத அரசியல் சந்தர்ப்பவாதத்தின் அப்பட்டமான உதாரணமாகும். நீட் எதிர்ப்பு பிரச்சாரத்தின் மூலம் தனது ‘கோட்’ படத்தின் வெற்றிக்கும், வசூலுக்கும் அச்சுறுத்தலை தவிர்க்க திமுக அரசின் முடிவுக்கு திடீர் ஆதரவு எடுத்துள்ளார் விஜய்.
திமுக அரசுக்கு எதிரான நிலை கொண்ட நடிகர்கள் படத்தை தமிழகத்தில் திரையிடவே முடியாது என்றநிலை இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்தமுறை விஜய் திரைப்படத்துக்கு ஏற்பட்ட தடைகள், இந்த முறை ஏற்படாமல் இருக்க தொழில் சார்ந்த திட்டத்தின் அடிப்படையில், அவர் எடுத்த இந்த முடிவு ஆபத்தான சுயநல அரசியலாகும்.
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றி அரசியல் சட்டத் திருத்தத்தை முன்மொழிய வேண்டும் என்ற கருத்தும், நீட் தேர்வின் பலன்கள் குறித்த அவரது அறியாமையை வெளிப்படுத்துகிறது.
இதன்மூலம் பொய்களை பரப்பி, தமிழகத்தின் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து தவறான பாதையை விஜய் தேர்ந்தெடுத்துள்ளார். நீட் குறித்து பொய்களை கூறி மாணவர்களின் எதிர்காலத்துடன் அவர் விளையாடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது.
மாணவர்களையும் பெற்றோரையும் தவறாக வழி நடத்தாமல் தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் வகையில் விஜய் செயல்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.