Published : 25 Aug 2014 10:49 AM
Last Updated : 25 Aug 2014 10:49 AM

நியூசிலாந்தில் உலகத்தரம் வாய்ந்த கல்வி வாய்ப்புகள்: சென்னையில் கிரிக்கெட் வீரர் ஸ்டீபன் பிளமிங் பேச்சு

நியூசிலாந்து நாட்டில் உலகத்தரம் வாய்ந்த கல்வி வாய்ப்புகள் உள்ளன. அதனை இந்தியர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கிரிக்கெட் வீரர் ஸ்டீபன் பிளமிங் கூறினார்.

நியூசிலாந்து நாட்டில் உயர்கல்வி மேற்கொள்வது குறித்த கல்வி கண்காட்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில், நியூசிலாந்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு அந்நாட்டு கல்விச்சூழல் குறித்து மாணவர்களுடன் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் நியூசி லாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளருமான ஸ்டீபன் பிளமிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் கூறியதாவது:

இந்தியா மீதும் இந்தியர்கள் மீதும் எனக்கு தனி மரியாதை உண்டு. இந்தியர்களின் விடா முயற்சியும், அவர்களின் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் என்னை வெகுவாக ஈர்க்கின்றன. தற்போது ஏராளமான இந்திய மாணவர்கள் நியூசிலாந்தில் உயர் கல்வி மேற்கொண்டு வருகின்றனர். நியூசிலாந்தை பொறுத்தவரையில் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றில் பயின்று இந்திய மாணவர்கள் தங்களது வாழ்வை நல்ல முறையில் அமைத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கல்வி கண்காட்சியை நியூசிலாந்து கல்வி மேம்பாட்டு மையமான ‘எஜுகேஷன் நியூசி லாந்து’ ஏற்பாடு செய்திருந்தது. நியூசிலாந்தின் ஏயுடி பல்கலைக் கழகம், ஈஸ்டர்ன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, யுனிவர்சல் காலேஜ் ஆஃப் லேர்னிங், யுனிவர்சிட்டி ஆஃப் கெண்டர்பரி நிறுவனங்கள் பங்கேற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x