Published : 22 May 2018 08:03 AM
Last Updated : 22 May 2018 08:03 AM

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு தொடக்கம்: ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது நேற்று காலை தொடங்கியது.

இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.பாலச்சந்திரன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 360 இடங்கள் இருக் கின்றன.

அதேபோல, சென்னை கோடுவளியில் உள்ள உணவு, பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள், ஓசூர் மத்தி கிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மை கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 40 இடங்கள் என மொத்தம் 460 இடங்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் இன்று (நேற்று) காலை 10 மணிக்கு தொடங்கியது. ஜூன் 6-ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த சான்றிதழ்களுடன் ‘தலைவர், சேர்க்கைக் குழு (இளநிலை பட்டப்படிப்பு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென் னை-600 051’ என்ற முகவரிக்கு ஜூன் 11 மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

எவ்வாறு விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது என்பதை இணையதளத்தில் உள்ள Spcimen Copy-ஐ பார்த்து மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். பி.வி.எஸ்.சி-ஏ.ஹெச் மற்றும் பி.டெக் ஆகிய இரண்டு படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பிடெக் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரே விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஜூலை முதல் வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.

பேட்டியின்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் திருநாவுக்கரசு, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் கே.குமணன், மாணவர் சேர்க்கை தலைவர் செல்வகுமார் ஆகி யோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x