முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பெயரில் சமூக வலைதளத்தில் அவதூறு: உதவியாளர் போலீஸில் புகார்

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்
Updated on
1 min read

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத் தேர்தலை மையப்படுத்தி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பெயரில் சமூக வலைதளத்தில் அவதுாறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ள நிலையில், பாமகவும் நாதகவும் அதிமுகவின் ஆதரவை வெளிப்படையாகவே கேட்டு வருகின்றன. இருந்தபோதும் இதுவரை அதிமுக எந்தக் கட்சிக்கும் தனது ஆதரவை தெரிவிக்கவில்லை.

ஆனால், பாமகவினர் தேர்தல் பிரச்சார பேனர்களில் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு வாக்குச் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், “புரட்சித்தலைவி அம்மாவின் பெயரையோ, போட்டோவையோ பயன்படுத்த பாமகவுக்கு எந்த யோக்கியதையும் கிடையாது. பாஜகவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு அதிமுகவை அழிக்க நினைத்த பாமகவுக்கு அதிமுக தொண்டன் ஒருபோதும் ஓட்டு போட மாட்டான்” என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பெயரில் சமூக வலைதளத்தில் ஒரு செய்தி உலா வருகிறது.

இந்தச் செய்தி வைரலான நிலையில், இது குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உதவியாளர் ராஜாராம், நேற்று இரவு திண்டிவனம் ரோஷணை போலீஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “சமூக வலைதளத்தில் சி.வி.சண்முகம் குறித்து அவதுாறாக கருத்துப் பரப்பி வருகின்றனர். தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. சி.வி.சண்முகம் டெல்லியில் உள்ளதால், அவர் கூறியதன் பேரில் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டதாக அவரது உதவியாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in