Published : 04 Jul 2024 08:37 AM
Last Updated : 04 Jul 2024 08:37 AM

அமாவாசை, வார கடைசி நாட்கள்: 1,065 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு

சென்னை: அமாவாசை, வாரக் கடைசி நாட்களையொட்டி சென்னை உள்ளிட்ட இடங்களிலிருந்து 1,065 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஜூலை 5 (வெள்ளிக்கிழமை - அமாவாசை), ஜூலை 6, 7 வாரக் கடைசி நாட்கள் (சனி, ஞாயிறு) என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூலை 5,6 தேதிகளில் 725 பேருந்துகள், கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 110 சிறப்புப் பேருந்துகள், திருவண்ணாமலைக்கு 30 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 1,065 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறப்புப் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாரக் கடைசி நாட்களில் பயணிக்க 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x