தனியார் குடியிருப்பில் குழந்தைகளை துரத்தும் தெரு நாய்களை அப்புறப்படுத்த கோரி வழக்கு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மெட்ரோஜோன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் ஷபீனா பாத்திமா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சமீபகாலமாக சென்னை உட்பட பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் குழந்தைகளை கடித்து குதறும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

சென்னை கோயம்பேட்டில் விஆர்மால் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியான மெட்ரோஜோனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் இரவு, பகல்பாராமல் சுற்றித்திரிந்து வருவோர், போவோரை கடிக்கின்றன. ஏராளமான சிறுவர், சிறுமியர் வசிக்கும் இந்த குடியிருப்பில் தெருநாய்களை அப்புறப்படுத்தக்கோரி குடியிருப்பு சங்க நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் இரவு நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் பெண்களும் சிரமமடைந்து வருகின்றனர். எனவேஅசம்பாவிதம் எதுவும் நடைபெறுவதற்குள் மெட்ரோஜோன் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கூறும்போது, ‘‘தெரு நாய்களை பிடித்துச்செல்ல மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும் சமூக ஆர்வலர்கள் எனக்கூறும் சிலர் நாய்களை ஊழியர்கள் பிடித்து செல்வதை தடுத்து வருகின்றனர்.

தெரு நாய்களை துன்புறுத்துவதாக ‘ப்ளு-கிராஸ்’ அமைப்பி்ன் மூலம் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம் என மாநகராட்சி ஊழியர்களை மிரட்டி வருகின்றனர்’’ என தெரிவிக்கப்பட்டது.

அப்போது மாநகராட்சி நிர்வாகம் தரப்பில், ‘‘தெரு நாய்களை பிடிப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என பதிலளிக்கப்பட்டது. அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்தவழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in