Last Updated : 16 May, 2018 11:12 AM

 

Published : 16 May 2018 11:12 AM
Last Updated : 16 May 2018 11:12 AM

300-க்கும் மேற்பட்ட நாவல்களைப் படைத்த பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்: கலையுலகினர், எழுத்தாளர்கள், வாசகர்கள் அஞ்சலி

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் நேற்று மதியம் காலமானார். அவருக்கு வயது 72. அவரது உடலுக்கு திரையுலகினர், எழுத்தாளர்கள், வாசகர்கள் உட்பட ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சினிமா, எழுத்து என அயராது உழைத்த பாலகுமாரன் ஏற்கெனவே 2 முறை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர். ஆனாலும், தொடர்ந்து உற்சாகத்துடன் எழுதி வந்தார். சமீபத்தில்கூட மகாபாரதம், ராமாயணத்தை எழுதிக்கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது நுரையீரலில் தொற்று பரவியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, பாலகுமாரன் நேற்று மதியம் 12.40 மணி அளவில் காலமானார்.

எழுத்தாளர் பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த பழமார்நேரி எனும் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். படித்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். அவரது தாயார் சுலோச்சனா அம்மையார், தமிழில் சிறந்த புலமை கொண்டவர். அவர் மூலமாக இலக்கிய நூல்கள் மீது பரிச்சயம் ஏற்பட, ஒருகட்டத்தில் அவரே எழுதத் தொடங்கினார்.

முதன்முதலாக, ‘கணையாழி’ இதழில் ‘டெலிபோன் துடைப்பவள்’ எனும் தலைப்பில் கவிதை எழுதினார். ஒரு அலுவலகத்தில் அவர் டைப்பிஸ்ட்டாக வேலை பார்த்தபோது, அங்கே வரும் டெலிபோன் துடைக்கும் பெண்ணைப் பற்றிய கவிதை அது.

பிறகு, ‘டாஃபே’ நிறுவனத்தில் 17 ஆண்டுகள் பணிபுரிந்தார். அதற்கிடையே கதைகளும் எழுதத் தொடங்கினார். ‘சாவி’ இதழில் நிருபராகவும் பணியாற்றினார். அப்போது எழுத்தாளர் சாவி, இவரது எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு, தொடர்கதை எழுத அனுமதி தந்தார். ‘மெர்க்குரிப் பூக்கள்’ எனும் தலைப்பில் இவர் எழுதிய தொடர்கதை, மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

அதையடுத்து, ‘பச்சைவயல் மனது’, ‘தாயுமானவன்’, ‘சின்னச் சின்ன வட்டங்கள்’, ‘சிநேகமுள்ள சிங்கம்’ என தொடர்ந்து எழுதினார். எழுத்துப் பணி ஒரு பக்கம், வேலை ஒரு பக்கம் என கடுமையாக உழைத்தார். கல்கியில் இவர் எழுதிய ‘இரும்புக் குதிரைகள்’ நாவல், பெரிதும் பேசப்பட்டது. ஏராளமான வாசகர்கள் அவரது எழுத்தில் கட்டுண்டுபோனார்கள்.

அதன் பிறகு, ‘சுகஜீவனம்’, ‘அகல்யா’, ‘பந்தயப் புறா’, ‘ஆசை என்னும் வேதம்’, ‘இனிது இனிது காதல் இனிது’, ‘மெளனமே காதலாக’, ‘ஆசைக்கடல்’, ‘தலையணைப் பூக்கள்’ என்று வரிசையாக வெளிவந்த இவரது படைப்புகள், வாசகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

இதற்கிடையே, நடிகர் கமல்ஹாசனுடன் நட்பு ஏற்பட்டது. இயக்குநர் கே.பாக்யராஜ் தன் படங்களின் கதை விவாதங்களுக்கு இவரை அழைத்துக்கொண்டார். ஒருகட்டத்தில், இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, ‘சிந்துபைரவி’, ‘புன்னகை மன்னன்’ மற்றும் சில கன்னடப் படங்களிலும் பணிபுரிந்தார். கே.பாக்யராஜின் மேற்பார்வையில் உருவான ‘இது நம்ம ஆளு’ படத்தை இயக்கினார்.

அப்போது, இவர் எழுதிய ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ எனும் இவரின் அனுபவத் தொடரும், ‘முன்கதைச் சுருக்கம்’ எனும் சுயசரிதைத் தொடரும் இன்னும் ஏராளமான வாசகர்களை இவருக்கு பெற்றுத் தந்தது. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த ‘நாயகன்’ படத்தில் இவர் எழுதிய வசனங்கள், இன்றைக்கும் பேசப்படுகிறது. பிறகு ‘குணா’, ‘செண்பகத் தோட்டம்’, ‘கிழக்குமலை’, ‘மாதங்கள் ஏழு’, ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’, ‘உல்லாசம்’, ‘முகவரி’, ‘சிட்டிசன்’, ‘மன்மதன்’, ‘வல்லவன்’, ‘புதுப்பேட்டை’, ‘கிங்’, ‘காதல் சடுகுடு’ என பல படங்களில் திரைக்கதையிலும், வசனம் எழுதுவதிலும் பங்காற்றினார்.

அதேசமயம் அவரது கனவுப் படைப்பான ‘உடையார்’ என்ற ராஜராஜசோழனின் சரித்திரத்தை, 6 பாகங்கள் எழுதினார். இலக்கிய உலகிலும் எழுத்துலகிலும் பலரும் படித்துவிட்டு, பிரமித்துப் போனார்கள்.

யோகி ராம்சுரத்குமார் எனும் திருவண்ணாமலை மகானை குருவாக ஏற்றுக்கொண்டது முதல் ஆன்மிகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டு, பல ஆன்மி காவியங்களை எழுதினார். இவர் எழுதிய கிருஷ்ணர் குறித்த கதைகள், அபிராமிபட்டர், அருணகிரிநாதர், விதுரர், குமரகுருபரர், ராகவேந்திரர் ஆகிய மகான்களின் சரிதங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இவரது எழுத்துகளால் கவரப்பட்ட வாசகர்கள், ஆன்மிகத்திலும் நாட்டம் கொண்டனர். இவரை தமது ஆதர்ச எழுத்தாளராகக் கொண்ட வாசகர்கள், ஒருகட்டத்தில் இவரை தங்கள் தந்தையாகவும், குருவாகவும் ஏற்று, அவரது எழுத்துகளைப் பின்பற்றினர். ‘எழுத்துச்சித்தர்’ என்று அவரைக் கொண்டாடினர். ‘கலைமாமணி’ உட்பட பல விருதுகளையும் பெற்றார்.

எண்பது மற்றும் தொண்ணூறுகளில் தன் எழுத்துகளால், ஒரு தலைமுறையையே கட்டிப்போட்ட எழுத்தாளர் பாலகுமாரன் 1946-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பிறந்தவர். அவருக்கு வயது 72. மறைந்த பாலகுமாரனுக்கு கமலா, சாந்தா என்ற மனைவிகள், ஸ்ரீகெளரி என்ற மகள், சூர்யா என்ற மகன் உள்ளனர். பாலகுமாரனின் மறைவு குறித்து அறிந்ததும் ஏராளமான வாசகர்கள், மருத்துவமனையிலும் மயிலாப்பூர் வாரன் சாலையில் உள்ள அவரது இல்லத்திலும் திரண்டனர். ரஜினிகாந்த், ராஜ்கிரண், இயக்குநர் அட்லி, வழக்கறிஞர் சுமதி, ஜோதிடர் ஷெல்வீ உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கலையுலகினர், ரசிகர்கள் உட்பட ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர். இறுதிச்சடங்கு இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x