Published : 02 Jul 2024 08:02 PM
Last Updated : 02 Jul 2024 08:02 PM

புதிய குற்றவியல் சட்டங்களால் எளிய மக்களுக்கு கடும் பாதிப்பு: மார்க்சிஸ்ட் பட்டியல்

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வேலூர் மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.

சென்னை: “எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இடைநீக்கம் செய்து விட்டு அவசர, அவரசமாக சட்ட அமைச்சருக்கு பதிலாக உள்துறை அமைச்சரே மசோதாவை சமர்ப்பித்து எவ்வித விவாதமின்றி ஜனநாயக விரோதமாக மத்திய பாஜக அரசு நிறைவேற்றிக் கொண்டதுதான் புதிய குற்றவியல் சட்டங்கள். மோடி அரசின் இந்த ஜனநாயகப் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மோடி அரசு தனது கடந்த ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்‌ஷியா ஆகிய புதிய சட்டங்களை எதிர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இடைநீக்கம் செய்து விட்டு அவசர, அவரசமாக சட்ட அமைச்சருக்கு பதிலாக உள்துறை அமைச்சரே மசோதாவை சமர்ப்பித்து எவ்வித விவாதமின்றி ஜனநாயக விரோதமாக மத்திய பாஜக அரசு நிறைவேற்றிக் கொண்டது. மோடி அரசின் இந்த ஜனநாயகப் படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஏற்கெனவே வன்மையாக கண்டித்திருந்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348-வது பிரிவு, சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டுமெனக் கூறுகிறது. ஆனால், மேற்படி மூன்று சட்டங்களின் பெயர்கள் சமஸ்கிருத ஒலியமைப்பில் இந்தி மொழியில் அரசியலமைப்புக்கு விரோதமாக உள்ளது. மேலும், பல்வேறு மொழிகள் பேசும் மாநில அரசுகளின் உரிமை, கூட்டாட்சி தத்துவம், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகவும் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆங்கிலேயர் காலத்து தேச துரோக சட்டப்பிரிவை (124 A - IPC) நீக்கிவிட்டு அதைவிட கொடுமையான சட்டப்பிரிவு புதிய தண்டனைச் சட்டத்தில் சேர்த்துள்ளது. மேலும், விசாரணைக்காக கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு 15 நாட்கள் ரிமாண்ட் என்பதை 90 நாட்கள் என நீட்டித்திருப்பதும், ரிமாண்ட் செய்யும் அதிகாரத்தை நிர்வாகத்துறை நடுவருக்கு (தாசில்தார்) வழங்கியிருப்பதும் காவல் துறைக்கு பல்வேறு பிரிவுகளில் எல்லையில்லா அதிகாரங்களை வழங்கியும், சட்டரீதியில் ஜனநாயக உரிமைகளை மறுத்தும், போலீஸ் ராஜ்ஜியத்தை உருவாக்கவும் புதிய சட்டங்கள் முனைந்துள்ளன. பழைய சட்டத்தில் உள்ள மதவெறிக்கு எதிரான பிரிவுகள் நீக்கப்பட்டு; மதவெறி மற்றும் வெறுப்பு பேச்சுக்கு ஆதரவாக புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மதவெறி சக்திகளுக்கும் கார்ப்பரேட்மயத்துக்கும் ஆதரவாகவே மேற்படி மூன்று சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. இச்சட்டங்களினால் சாதாரண ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சிறுபான்மை மக்களையும், மோடி அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுபவர்களையும் குறிவைத்து தாக்குவதற்கும், நீதித்துறையில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கோடும் இச்சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

மேற்படி சட்டங்களை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் வழக்கறிஞர்களும், பொதுமக்களும் போராடி வருகின்றனர். தமிழகத்தில் இரண்டு நாட்களாக மாநிலம் முழுவதும் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து போராடி வருகின்றனர்.

எனவே, மத்திய பாஜக அரசு பொதுமக்களின் நலன் கருதி மேற்படி மூன்று சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை திரும்பப்பெற வேண்டுமெனவும், நாடாளுமன்றத்தில் இச்சட்டங்கள் குறித்து விரிவான ஜனநாயகப் பூர்வமாக விவாதம் நடத்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x