

தஞ்சாவூர்: இலவசப் பேருந்து என்று கூறி பேருந்தில் பெண்களை ஏற்ற மறுப்பதாகவும், தூய்மைப் பணியாளர்கள் என்பதால் தரக்குறைவாக நடத்துவதாகவும் கூறி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இன்று (ஜூலை 2) காலை பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தஞ்சாவூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள கிராமப் பகுதியிலிருந்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பணிக்காக அரசு நகரப் பேருந்துகளில் செல்வது வழக்கம்.
இந்நிலையில், இவர்கள் செல்லும் நேரத்தில் அரசு நகர பேருந்துகளை முறையாக இயக்கப்படவில்லை என்றும், அவ்வாறு இயக்கும் பேருந்தில் பெண்களை ஏற்ற மறுப்பதாகவும், எங்களை கண்டால் பேருந்துகள் நிற்காமல் வேகமாக செல்வதாக புகார் கூறி, தூய்மை பணியாளர்கள் போக்குவரத்து கழக நிர்வாகத்தை கண்டித்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தின் முன்பு தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை நேரம் என்பதால் அலுவலகத்தில் செல்பவர்கள், பள்ளி - கல்லூரிக்கு செல்பவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர்.
சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காவல் துறையினர் மற்றும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்துச் செல்வதற்காக தஞ்சாவூர் மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பணிக்காக அதில் அழைத்துச் சென்றனர்.