

சென்னை: இந்து மத வெறுப்பு அரசியலில் ஈடுபட்ட ராகுல் காந்தி, இந்துக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, தன்னை இந்து என்று கூறிக் கொள்பவர்கள் வன்முறையாளர்கள், பிறரை வெறுப்பவர்கள் , பொய் பேசுபவர்கள் என ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் இழிவுபடுத்தி பேசி உள்ளார்.
உலக வரலாற்றிலேயே மதத்தின் பெயரில் போர் செய்யாத, தன் மதத்திற்கு தீங்கு செய்பவர்களுக்குக் கூட நன்மை செய்யக்கூடிய மதம் சனாதன இந்து தர்மம். இந்துக்கள் அனைத்து மத கடவுள் படங்களை கூட தனது வணிக நிறுவனங்களில் வைத்து வணங்கக்கூடிய அளவில் நல்லிணக்கத்தோடு இருக்கக்கூடியவர்கள்.
உலகின் பல நாடுகளில் வசிக்கக் கூடிய இந்துக்களால் அந்த நாட்டில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை. அந்த நாட்டில் உள்ள மக்களோடு இணக்கமாக வாழ்ந்து வருகிறார்கள். அதனால் தான் உலகத் தலைவர்கள் இந்து இதிகாச புராணங்கள் மற்றும் கடவுள்களை போற்றி பெருமைப்படும் வகையில் பேசி வருகிறார்கள்.
இந்துமத நூல்கள் அனைத்தும் உண்மை, சத்தியம் போன்ற உயர்ந்த தத்துவங்களையே வலியுறுத்துகின்றன. காந்தியடிகள் கூட ஹிந்து மதத்தில் உள்ள அஹிம்சை, சத்தியம் போன்றவற்றையே அனைவருக்கும் வலியுறுத்தி வந்தார். தற்போது அந்த காந்தி பெயரை பொய்யாக தன் பெயருக்கு பின்னால் பொருத்தியிருக்கும் ராகுல், இந்து மத தத்துவங்கள், பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கம் ஏதும் அறியாமல் இழிவுபடுத்தி நாடாளுமன்றத்தில் பேசி இருப்பது வேதனைக்குரியது.
ஆயிரக்கணக்கான சீக்கியர்களை கொன்று வன்முறை வெறியாட்டம் ஆடிய காங்கிரஸ் (கட்சியின்) தலைவர், இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறுவது வெட்கம். கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மத சிறுபான்மையினரை தாஜா செய்து அதன் மூலம் அவர்களின் ஓட்டுக்களை பெற வேண்டும் என்பதற்காக இந்தியாவில் பெரும்பான்மையாக வசித்து வரும் இந்துக்களை வன்முறையாளர்களாகவும், வெறுப்பு உணர்வாளர்களாகவும், பொய்யர்களாகவும் சித்தரித்து இழிவு படுத்திய ராகுல் காந்தியை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இந்துக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.