ராகுல் மன்னிப்பு கேட்க கோரி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக எம்எல்ஏ போராட்டம்

ராகுல் மன்னிப்பு கேட்க கோரி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக எம்எல்ஏ போராட்டம்
Updated on
1 min read

புதுச்சேரி: நாடாளுமன்ற கூட்டத்தில் இந்துக்களை வன்முறையாளர்கள் என கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக் கோரி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக எம்எல்ஏ போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னதாக நேற்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவையில் பல்வேறு கருத்துகளை முன்வைத்துப் பேசினார். அவருடைய பேச்சால் ஆளும் பாஜக மற்றும் ராகுல் காந்தி இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நேற்றைய நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்துக்களை வன்முறையாளர்கள் என கூறியதற்காக இந்து சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக நியமன எம்எல்ஏ அசோக்பாபு பதாகையுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

ஏற்கெனவே, முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜக,ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி டெல்லிக்கு நேற்று இரவு சென்றனர். ஆனால் அசோக்பாபு டெல்லி செல்லவில்லை. தற்போது அவர் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்.

அதையடுத்து தகவலறிந்த பேரவைத் தலைவர் செல்வம் தனது அறையில் இருந்து அசோக்பாபு எம்எல்ஏ தர்ணா போராட்டம் நடத்திய இடத்துக்கு வந்து அவரைச் சமாதானம் செய்தார். அப்போது, “ராகுல் காந்தி பேசிய விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதிப்பீர்களா?” எனக் கேட்டார். அதற்கு பேரவைத்தலைவர் செல்வம், “பேசலாம் வாங்க” எனக் கூறி அழைத்துச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in