Published : 10 May 2018 07:35 AM
Last Updated : 10 May 2018 07:35 AM

தென்னிந்திய நதிகள் இணைப்பே என் வாழ்நாள் கனவு: ‘காலா’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் உருக்கம்

தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பதே எனது வாழ்க்கையில் ஒரே கனவு என்று ‘காலா’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

இது ஆடியோ வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை. படத்தின் வெற்றி விழா மாதிரி இருக்கிறது. ‘சிவாஜி’ பட வெற்றி விழாவில் கருணாநிதி கலந்துகொண்டார். 75 ஆண்டுகளாக ஒலித்த அவரது குரல் மீண்டும் கேட்க வேண்டும் என்று கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். அதில் நானும் ஒருவன். வெகு சீக்கிரத்தில் அந்தக் குரல் கேட்கும் என்று நம்புகிறேன்.

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பில் ‘லிங்கா’ படம் பண்ணினேன். அது தண்ணீர் பஞ்சம் பற்றிய படம். இமயமலைக்கு நான் போவதே அங்கு கங்கை நதியைப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். கங்கை நதி சில இடங்களில் ரவுத்திரமாகவும், சில இடங்களில் அமைதியாகவும் வரும். அதைப் பார்க்க அற்புதமாக இருக்கும். தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பதே எனது வாழ்க்கையில் ஒரே கனவு. அவற்றை இணைத்துவிட்டால், அடுத்த நாளே நான் கண்ணை மூடினாலும் பரவாயில்லை.

‘கபாலி’ படத்துக்கு பிறகு நான்கைந்து இயக்குநர்களிடம் கதை கேட்டேன். வெற்றிமாறன் சொன்ன கதை சூப்பர் கதைதான். ஆனால், அது முழுவதும் அரசியல் சம்பந்தப்பட்ட கதை. நான் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. அதற்கு நான் ஆசைப்படவும் இல்லை. தயவுசெய்து இப்படம் இப்போது வேண்டாம் என்று அவரிடம் சொன்னேன்.

மறுபடியும் ரஞ்சித் நினைவுக்கு வந்தார். நாங்கள் பல விஷயங்கள் பேசினோம். மலேசியா தாதா பற்றி ‘கபாலி’ படம் எடுத்தோம். நான் இந்தி படத்துக்காக பல ஆண்டுகள் மும்பையில் இருந்திருக்கிறேன். அங்குள்ள தாராவியில் 70 சதவீதம் தமிழ் மக்கள் உள்ளனர். அங்குள்ள மக்களைப் பற்றி படம் எடுக்கலாம் என்றேன். அதுதான் ‘காலா’ படமாக உருவாகியிருக்கிறது.

‘கபாலி’ உங்கள் படம். ‘காலா’ உங்கள் படமாகவும் இருக்க வேண்டும். அது எனது (ரசிகர்கள்) படமாகவும் இருக்க வேண்டும் என்று ரஞ்சித்திடம் சொன்னேன். ‘காலா’ அரசியல் படம் இல்லை. ஆனால், படத்தில் அரசியல் இருக்கிறது. ரஞ்சித் இயக்குநராக தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளமாட்டார். பெரிய ஆளாக வருவார். சமூகப் பிரச்சினைகள் பற்றி ஆழமாக சிந்திப்பவர். இந்த வயதில் இதுபோன்று சிந்திப்பவரை நான் சந்தித்தது இல்லை. உங்கள் பயணம் தொடரட்டும்.

இந்தப் படம் ரொம்ப வித்தியாசமாக இருக்கும். இத்தனை ஆண்டுகள் பணியாற்றியதில் எனக்கு சவாலாக 2 வில்லன்கள் அமைந்தனர். ஒருவர் ‘பாட்ஷா’ ஆண்டனி. மற்றொவர் ‘படையப்பா’நீலாம்பரி. ‘காலா’வில் நானே படேகர். அவ்வளவு அருமையான வில்லனாக நடித்துள்ளார். நிச்சயம் இப்படம் வெற்றியடையும் என்று நம்புகிறேன்.

இன்னும் நான் விஷயத்துக்கு (அரசியல்) வரவில்லை என நினைக்கிறீர்கள். இன்னும் அந்த தேதி வரவில்லை. கடமை இருக்கிறது. நேரம் வரும். அந்த நேரம் வரும்போது ஆண்டவன் ஆசிர்வாதத்தால், மக்கள் ஆதரவால் தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் நல்ல நேரம் பிறக்கும்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

இந்த விழாவில், லதா ரஜினிகாந்த், படத் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா, ‘காலா’ பட இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், ‘காலா’ படக் குழுவினர், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x