

சென்னை: தேசிய மருத்துவர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மருத்துவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தொண்டுள்ளமும், அர்ப்பணிப்புணர்வும் கொண்டு சேவையாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெறும் மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் தின வாழ்த்துகள்.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: மருத்துவர்கள் இறைவனுக்கு இணையாக மதிக்கப்படுபவர்கள். அதிலும் கரோனா காலத்தில் தங்களது நலத்தையும் தியாகம் செய்து பல உயிர்களை காப்பாற்றியவர்கள். மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையைப் போற்றுகின்ற இந்நேரத்தில் மருத்துவர்களை பாதுகாப்பதும் நமது ஒவ்வொருவரின் கடமை.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: மருத்துவர்கள் தினத்தில் அனைத்து மருத்துவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நமது ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றும் மருத்துவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பையும், சமூகத்தின் நலனுக்கான அவர்களது விலைமதிப்பற்ற பங்களிப்பையும் மதிக்க வேண்டியது நமது கடமையாகும்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: மருத்துவத்துறையில் முன்மாதிரியான மாநிலமாக திகழும் தமிழகத்தில் தகுதிக்கு ஏற்ற ஊதியம் வேண்டி அரசு மருத்துவர்கள் நீண்டகாலமாக போராடி வருவது அவமானத்துக்குரியது. எதிர்க்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தன்னலம் கருதாமல் ஓய்வின்றி உழைக்கும் மருத்துவர்களின் தியாகத்தையும், சேவை மனப்பான்மையையும் போற்றி வணங்குகிறேன். தகுதிக்கேற்ற ஊதியம் கோரி நீண்டகாலம் போராடி வரும் அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: உயிர்களை காக்க பாடுபடும் மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் தின வாழ்த்துகள். திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.