

சென்னை: திருடுபோன வாகனங்களை மீட்க, ஆங்காங்கே ஏற்கெனவே உள்ள சிசிடிவி கேமராக்களோடு கேமராவாக சென்னையில் முக்கிய சாலை சந்திப்புகளில் 500 நவீன கேமராக்களையும் போலீஸார் நிறுவியுள்ளனர். திருடுபோன வாகனங்கள் சென்றால், இந்த கேமராக்கள் புகைப்படம் எடுத்து அதுகுறித்து காவல் துறைக்கு உடனடியாக எச்சரிக்கை விடுக்கும்.
சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வாகனத் திருட்டை தடுக்கவும், அதில் தொடர்புடையவர்களை கைது செய்யவும் போலீஸார் புதிய வியூகத்தை கையிலெடுத்துள்ளனர்.
வாகனங்கள் திருடப்பட்டால் சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி அதை அடிப்படையாக வைத்து துப்புத் துலக்குவார்கள். ஆனால், சில நேரங்களில் வாகன திருடு நடைபெறும் இடங்களில் சிசிடிவி கேமரா இருப்பதில்லை.
சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும் அவை பழுதடைந்திருக்கும். இதனால், இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்ட திருடுபோன வாகனங்களைக் கண்டுபிடிப்பது போலீஸாருக்கு சவாலாக இருக்கும். இது போன்ற சூழலில் பழைய குற்றவாளிகள் யாரேனும் பிடிபட்டு, அவர்கள் தகவல் கொடுத்தால் மட்டுமே திருடுபோன வாகனங்கள் மற்றும் அதை திருடியவர்கள் குறித்த தகவல் வெளியாகும். இதற்கு நீண்ட காலம் பிடிக்கும்.
இதற்கு மாற்று ஏற்பாடாக, தற்போது இரவு நேரங்களில் போலீஸார் நடமாடும் நவீன கேமராக்களை வாகன சோதனையின்போது பயன்படுத்துகின்றனர். இந்த கேமராக்கள் சாலை சந்திப்புகளில் வைக்கப்படும். இதைக் கடந்து செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை இதில் உள்ள கேமரா படம் பிடிக்கும். ஏற்கெனவே திருடுபோய், அது தொடர்பாக புகார் தெரிவித்து இருந்தால் அந்த வாகனம் குறித்து நடமாடும் நவீன கேமரா போலீஸாருக்கு எச்சரிக்கை செய்யும். இதுவும் போலீஸாருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.
இதையடுத்து அடுத்த கட்ட முயற்சியை சென்னை போலீஸார் கையிலெடுத்துள்ளனர். அதாவது, சென்னை மாநகர பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1,750 இடங்களில் காணொலி பகுப்பாய்வுடன் கூடிய 5,250 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
அதனுடன் சேர்த்து தற்போது போலீஸார் 500 இடங்களில் நவீன கேமராக்களையும் முக்கிய சாலை சந்திப்புகள், பிரதான பகுதிகளில் வைத்துள்ளனர். இதில் ஏற்கெனவே சென்னையில் திருடுபோனதாக புகார் அளிக்கப்பட்ட வாகனங்களின் எண்கள் பதிவேற்றம் செய்து வைக்கப்பட்டிருக்கும்.
இந்த வாகனங்கள் சாலையில் சென்றால் போலீஸார் வைத்துள்ள 500 கேமராக்களில் ஏதேனும் ஒன்றில் சிக்கும். உடனே, இதுகுறித்து போலீஸாருக்கு புகைப்படத்துடன் எச்சரிக்கை செய்துவிடும். இதையடுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் திருடுபோன வாகனங்களை மீட்பதோடு, அதை ஓட்டிச் செல்லும் திருடர்களையும் கைது செய்ய முடியும்.
இப்படி சென்னையில் தினமும் சராசரியாக 5 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கேமராக்கள் வாகனத் திருடர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.