Last Updated : 21 May, 2018 04:53 PM

 

Published : 21 May 2018 04:53 PM
Last Updated : 21 May 2018 04:53 PM

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல்: மாநில வருவாயை எப்படி விட்டுத்தர முடியும்?-அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்பட்டால், மாநிலத்தின் வரி வருவாய் பாதிக்கும், மாநிலத்தின் வரி வருவாயை எப்படி விட்டுத்தர முடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கர்நாடகத் தேர்தல் காரணமாக, கடந்த 19 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தாமல் இருந்தன. தேர்தல் முடிந்தபின் கடந்த 14-ம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக 8-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 24 காசுகள் உயர்த்தப்பட்டு சென்னையில் ரூ.79.47 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் விலையில் லிட்டருக்கு 27 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.71.59 காசுகளுக்கு விற்பனையாகிறது.

இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள், பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதால், மக்களின் சுமையைக் கருதி வாட் வரியை தமிழக அரசு குறைக்கும் திட்டம் வைத்திருக்கிறதா, பெட்ரோல் ,டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சிலில் வலியுறுத்துவீர்களா எனக் கேட்டனர்.

அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது:

''அரசு ஊழியர்களுக்கு ஊதியம், மக்களுக்கான இலவசத் திட்டங்கள், நலத்திட்டங்கள் ஆகியவற்றுக்கான செலவு ரூ.77 ஆயிரம் கோடி ஆகிறது. இந்தச் செலவை தமிழக அரசு தனது சுய வருவாய் மூலமே ஈடுகட்ட வேண்டும். அந்த வருவாய் என்பது, பெட்ரோலியம் பொருட்கள், மதுவகைகள் மீது விதிக்கப்படும் வாட் வரி மூலமாகவே கிடைக்கிறது. வாட் வரியைக் குறைத்தால், மக்களுக்கான இலவசத் திட்டங்களுக்கும், அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கும் பணம் எங்கிருந்து வரும்? ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்பட்டால் மாநிலத்தின் வரி வருவாய் பாதிக்கப்படும். மாநிலத்துக்கு வரும் வரி வருவாயை எப்படி விட்டுத்தர முடியும்?''

இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதன் மூலம் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வாட் வரியை தமிழக அரசு குறைக்கும் திட்டம் இல்லை என்பதை மறைமுகமாக அமைச்சர் ஜெயக்குமார் உணர்த்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x