

சென்னை: சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 25,429 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. ரயில் பெட்டி தயாரிப்பில் உலகப் புகழ் பெற்று விளங்கும் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை (Integral Coach Factory - ஐசிஎஃப்) சென்னை பெரம்பூரில் உள்ளது. இந்த ஆலை கடந்த 1955 அக்டோபர் 2-ம் தேதி தொடங்கப்பட்டது.
தொடக்கத்தில், ரயிலின் உட்புற பாகங்களை பொருத்தும் தொழிற்சாலையாக இது இருந்தது. பின்னர் படிப்படியாக மாற்றமடைந்து, ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையாக உயர்ந்தது. 1957-58 ஆண்டில் 74 பெட்டிகள் தயாரிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆண்டுக்கு சுமார் 3,000 பெட்டிகள்வரை தயாரிக்கப்படுகின்றன.
இங்கு இஎம்யு ரயில், டிஎம்யு ரயில், அதிவிரைவு விபத்து நிவாரண ரயில், ஏசி இஎம்யு ரயில், சுற்றுலா ரயில், மகாராஜா விரைவு ரயில், கொல்கத்தா மெட்ரோ, வந்தே பாரத் ஆகியவற்றுக்கான ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், ஐசிஎஃப் தொழிற்சாலையில் கடந்த 68 ஆண்டுகளில் மொத்தம் 75,000 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு, சமீபத்தில் சாதனை படைக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது: ஆலை தொடங்கிய முதல் 10 ஆண்டுகளில் (1955-56 முதல் 1964-65 காலகட்டத்தில்) 2,318 பெட்டிகள் தயாரிக்கப்பட்டிருந்தன. இது படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. அந்த வகையில், 1995-96 முதல் 2004-05 வரையிலான 10 ஆண்டு காலகட்டத்தில் 10,132 பெட்டிகள் தயாரிக்கப்பட்டன.
2005-06 முதல் 2014-15 வரையிலான 10 ஆண்டுகளில் 14,447 பெட்டிகள் தயாராகின.இவ்வாறு, பெட்டிகள் தயாரிப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் படிப்படியாக வளர்ந்துள்ளது, குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.
2015-16 முதல் 2024-25 வரையிலான கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஐசிஎஃப் தொழிற்சாலையில் 25,429 ரயில் பெட்டிகள்தயாரிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது 68 ஆண்டுகால மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கைவிட அதிகம்.
ரயில்வே வாரியம், ஐசிஎஃப் நிர்வாகம் ஆகியவை அளிக்கும் ஊக்கம், ஆதரவால் இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்த ஆண்டு 3,000 பெட்டிகள்தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, வந்தே பாரத், வந்தே மெட்ரோ ரயில்கள் அதிக அளவில்தயாரித்து வழங்கப்பட உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.