வாடகை வாகன ஓட்டுநர்கள் பணி பாதுகாப்பு வழங்க கோரிக்கை

வாடகை வாகன ஓட்டுநர்கள் பணி பாதுகாப்பு வழங்க கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வாடகை வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் உணவு, மளிகை பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்கு பெருநிறுவனங்களின் செயலிகளை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.

இதேபோல், செயலி மூலமாக முன்பதிவு செய்து வாடகை வாகனங்கள் மூலம் பயணங்களையும் மேற்கொள்கின்றனர். இவ்வாறான செயலிகள் மூலமாக இயங்கும் நிறுவன ஊழியர்களின் தேசிய அளவிலான கூட்டம், சென்னையில் 2 நாட்கள் நடைபெற்றது.

இதில் இந்தியன் பெடரேஷன்ஆப் ஆப்-பேஸ்ட் ட்ரான்ஸ்போர்ட் ஒர்க்கர் அமைப்பின் பொதுச்செயலாளர் உதய், தலைவர் பிரசாந்த், பொருளாளர் தர்மேந்தர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பிறகு செய்தித் தொடர்பாளர் ஜூட் மேத்யூ கூறியதாவது:

செயலி வாயிலாக இயங்கும் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு 2019-ம் ஆண்டு வகுத்தது. ஆனால் அதனை பல மாநிலங்கள் தற்போது வரை செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இவ்வாறான ஊழியர்களுக்கென நலவாரியம் போன்றவற்றை அமைத்து, அரசின் கண்காணிப்பில் வைத்திருந்தால் மட்டுமே பணி பாதுகாப்பு வழங்க முடியும்.

குறிப்பாக எங்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். 8 மணி நேர வேலை என்பதை உறுதி செய்ய வேண்டும். இஎஸ்ஐ, பி.எஃப் போன்றவை வழங்க வேண்டும் பைக் டாக்சி போன்றவற்றுக்கு அனுமதியளிப்பதோடு, தேசிய அளவில் ஒரே வழிமுறைகளை பின்பற்றும் வகையில்சட்டம் கொண்டு வர வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in