கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கு: விசிக பிரமுகரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

விசிக பிரமுகர்
விசிக பிரமுகர்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கு தொடர்பாக கடலூர் மேற்கு மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி செயலாளர் திராவிட மணியிடம் கலவர வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு இன்று விசாரணை நடத்தியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவரது தாயார் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், 2022 ஜூலை 17-ம் தேதி பள்ளி வளாகத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டு, பள்ளிக்குச் சொந்தமான உடைமைகள் சூறையாடப்பட்டன.

இதைத் தொடர்ந்து, ஆட்சியர், எஸ்பி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு மாணவியின் மர்ம மரணம் மற்றும் கலவரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸாரும், கலவர வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதனடிப்படையில் பள்ளி கலவரம் தொடர்பாக வாட்ஸ் குழு அமைத்து, கலவரக்காரர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் திராவிட மணி ஒருங்கிணைத்தது மற்றும் மாணவியின் தாயார் ஆகியோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு திராவிட மணிக்கு சம்மன் அனுப்பியதையடுத்து, நேற்று திராவிட மணி தனது வழக்கறிஞர்களிடம், கள்ளக்குறிச்சி காவல் நிலையம் அருகேவுள்ள கள்ளக்குறிச்சி கனியாமூர் கலவர விசாரணை சிறப்புப் புலானாய்வுக் குழு அலுவலகத்தில் ஆஜரானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in