டி20 உலக கோப்பை | இந்திய அணிக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து - ஆழ்கடலில் தேசிய கொடி ஏந்தி நீச்சல் வீரர்கள் கொண்டாட்டம்

ஆழ்கடலில் தேசிய கொடி ஏந்தி நீச்சல்  வீரர்கள் கொண்டாட்டம்
ஆழ்கடலில் தேசிய கொடி ஏந்தி நீச்சல் வீரர்கள் கொண்டாட்டம்
Updated on
1 min read

புதுச்சேரி: டி 20 உலக கோப்பையில் இந்தியா வென்றதற்கு ஆழ்கடலில் தேசிய கொடி ஏந்தி நீச்சல் வீரர்கள் இந்திய அணிக்கு வாழ்த்தை கொண்டாட்டமாக தெரிவித்தனர். முதல்வர் ரங்கசாமியும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுவையில் ஸ்கூபா டைவிங் பயிற்சி நடத்தி வருபவர் அரவிந்த் தருண்ஸ்ரீ. இந்தியா சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ஒவ்வொரு முறையும் வீரர்கள் சாதனை படைக்கும் போது அதனை தனது குழுவுடன் இணைந்து ஆழ்கடலில் வித்தியாசமான முறையில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

டி20 தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 17 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையை வென்றது. இதனை கொண்டாடும் வகையிலும் இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஆழ்கடல் நீச்சல் பயிற்சி வீரர் அரவிந்த் தருண்ஸ்ரீ தனது குழுவினருடன் புதுச்சேரி அருகே கடலில் 50 அடி ஆழத்திற்கு சென்று சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடியும், இந்திய தேசிய கொடியை ஆழ்கடலுக்குள் எடுத்து சென்று இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த தொடரில் இந்தியா ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் தொடர்ந்து தொடரை கைப்பற்றி பட்டம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பையை இரண்டு முறை வென்ற அணியாக வரலாற்று சாதனை படைத்திருக்கும் இந்திய அணிக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in