Published : 04 May 2018 02:34 PM
Last Updated : 04 May 2018 02:34 PM

தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் சி.பி.எஸ்.இ; வெளிமாநிலங்களில் தேர்வெழுதும் மாணவர்கள் செலவை அரசே ஏற்கவேண்டும்: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

நீட் தேர்வில் தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் வகையில் சிபிஎஸ்இ செயல்படுகிறது, வெளிமாநிலங்களில் மாணவர்கள் தேர்வெழுதுவதால் வீண் அலைச்சல், மன உலைச்சல் ஏற்படும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம் கண்டித்துள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இள நிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வை எழுதும் தமிழக மாணவர்களின் ஒரு பிரிவினருக்கு கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இதனால், தமிழக மாணவர்களுக்கு தேவையற்ற அலைச்சல், மன உளைச்சல் ,ஏராளமான பொருட் செலவு ஏற்படும். மொழி தெரியாத புதிய இடத்தில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதால் ,மனப்பதட்டம் அச்சம் ஏற்படும். இது தமிழக மாணவர்கள் மீதான உளவியல் ரீதியான கடும் தாக்குதலாகும்.

சி.பி.எஸ்.ஈ மற்றும் மத்திய அரசின் இச் செயல்பாடு தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் எதிரானது. இது தமிழக மாணவர்களுக்கு எதிரான திட்டமிட்ட சதி நடவடிக்கையாகும்.

தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே மையங்களை உருவாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும், மாணவர்களை எதிரி போல் பாவித்து சி.பி.எஸ்.ஈ. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது கண்டனத்திற்குரியது.

தமிழக மாணவர்கள் பிற மாநிலங்களில் சென்று தேர்வு எழுத வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய - மாநில அரசுகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு ,தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை உடனடியாக உருவாக்க வேண்டும்.

தமிழகத்திலேயே மையங்களை உருவாக்க முடியாத நிலையில், வெளி மாநிலங்களில் சென்று தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கும் , அவர்களுக்கு துணைக்கு வரும் உதவியாளர்களுக்கும் போக்குவரத்து வசதி, தங்கும் வசதி, தகவல் தொடர்பு வசதி போன்றவற்றை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உடனடியாக இலவசமாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அம் மாணவர்களுக்கு உதவும் வகையில் தகவல் தொடர்பு உதவி மையங்களை ஏற்படுத்த வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு டாக்டர் ஜி.ரவீந்திர நாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x