Published : 09 May 2018 11:59 AM
Last Updated : 09 May 2018 11:59 AM

தம்பி மனைவியை கொலை செய்ததாக அண்ணன் கைது: போலீஸ் விசாரணை

மன்னார்குடி அருகே தம்பி மனைவியை கொலை செய்ததாக அண்ணனை கைது செய்துள்ள போலீஸார், சொத்துத் தகராறில் கொலை செய்தாரா? அல்லது பலாத்கார முயற்சியில் ஈடுபட்டு கொலை செய்தாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள தெற்கு நாணலூரைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகள் எஸ்தர் (25). இவருக்கும் மேலாலவந்தச்சேரியைச் சேர்ந்த ஜோசப் ராஜசேகருக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். தற்போது ஒன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளார். ஜோசப் ராஜசேகரன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகின்றார்.

எஸ்தர் மேலாலவந்தச்சேரியில் உள்ள வீட்டில் குழந்தையுடன் வசித்து வருகின்றார். அருகிலேயே ஜோசப் ராஜசேகரனின் அண்ணன் நெல்சனும் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். சமீபத்தில்தான் ஜோசப் ராஜசேகரன் சொந்த ஊருக்கு வந்துவிட்டு வேலைக்கு சென்றார்.

இந்நிலையில், கடந்த 6-ம் தேதியன்று நாணலூரிலிருந்து எஸ்தரின் உறவினர்கள் திருமணப் பத்திரிகை கொடுப்பதற்காக மேலாலவந்தச்சேரியில் உள்ள எஸ்தரை பார்க்கச் சென்றபோது, எஸ்தர் இல்லை. அங்கு நெல்சன் எஸ்தரின் குழந்தையுடன் அந்த வீட்டில் இருந்தார். தொடர்ந்து எஸ்தர் தூங்குவதாகவும் தானே அந்தப் பத்திரிகையை கொடுத்து விடுவதாகவும்கூறி பத்திரிகையை பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தார்.

இவரது செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், அன்று மாலை எஸ்தரின் வீட்டுக்கு தங்கள் மகளை காணவில்லை என்றும் அங்கு வந்துள்ளாரா என்றும் ஊர்காரர்கள் சிலர் தொலைபேசி மூலம் கேட்டனர். இதனால் சந்தேகமடைந்த ஆராக்கியசாமி உடனடியாக மேலாலவந்தச்சேரிக்கு சென்று விசாரித்தார்.

தொடர்ந்து தேவங்குடி காவல் நிலையத்தில் தனது மகளை கண்டுபிடித்துத் தருமாறு புகார் அளித்தார். விசாரணையில் இறங்கிய போலீஸார் சந்தேகத்துக்கு இடமாக நடந்துகொண்ட நெல்சனை விசாரித்தனர். விசாரணையில் தம்பி மனைவியை தானே கொலை செய்து நாகப்பட்டினத்தில் உள்ள கடலில் கொண்டு சென்று வீசியதாக திங்கள் கிழமை மாலை வாக்குமூலம் அளித்தார்.

அதை நம்பிய போலீஸார் நாகை கடற்கரைக்கு நெல்சனையும் அழைத்துச் சென்று போலீஸார் எஸ்தரின் உடலைத் தேடினர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நெல்சனிடம் தீவிரமாக விசாரித்தபோது எஸ்தரை கொலை செய்து, தேவங்குடி அருகில் உள்ள கோரையாற்றாங்கரையில் மூட்டையாக கட்டி போட்டுள்ளதாகக் கூறியுள்ளார் அதைத் தொடர்ந்து நெல்சனை அழைத்து வந்து கோரையாற்றங்கரையில் மூட்டையில் கட்டிக் கிடந்த எஸ்தரின் உடலை மீட்டனர். மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தனது தம்பிக்கும், தனக்கும் இருந்த சொத்து தகராறில் எஸ்தரை கொலை செய்துவிட்டதாக போலீஸ் விசாரணையில் நெல்சன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x