Published : 24 May 2018 08:01 AM
Last Updated : 24 May 2018 08:01 AM

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக 132 பேர் கைது; மக்கள் அச்சப்பட வேண்டாம்: காவல்துறை

தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற கலவரம் தொடர்பாக இதுவரை 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் அச்சப்பட வேண்டாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடியில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கல்வீச்சு, தீ வைப்பு, பெட்ரோல் குண்டு வீ்ச்சு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். இதில் பல அரசு கட்டிடங்கள் சேதமடைந்தன. 127 இருச்சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இதனை தொடர்ந்து காவல் துறையினர் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் நடந்த சம்பவங்கள் தொடர்பாக 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.

மேலும், 2-வது நாளாக நேற்றும் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு, அண்ணாநகர் 6-வது தெரு, பிரையண்ட் நகர் பகுதிகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

2 காவல்துறை பேருந்துகள், வேளாண்மை துறைக்கு சொந்தமான 2 வாகனங்கள் மற்றும் ஒரு தனியார் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தபட்டன. பிரையண்ட் நகர் 12-வது தெருவில் கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அண்ணா நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டுள்ளது.

இதனால், போலீஸார் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். சிலர் காயமடைந்தனர். நேற்றைய வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பலியான 11 பேர் விபரம்

தூத்துக்குடி சிலோன் காலனி குருசாமி மகன் கந்தையா (55), லூர்தம்மாள்புரம் கோவில்பிச்சை மகன் கிளாஸ்டன் (40), குறுக்குச்சாலை தமிழரசன் (42), ஆசிரியர் காலனி சண்முகம் (40), தாமோதரன் நகர் சவுந்திரபாண்டியன் மகன் மணிராஜ் (25), தாளமுத்துநகர் அன்னை வேளாங்கண்ணி நகர் ஜோசப் ஸ்டாலின் மகன் அந்தோணி செல்வராஜ் (46), புஷ்பாநகர் பாஸ்கர் மகன் ரஞ்சித்குமார் (22), மினி சகாயபுரம் ஜாக்சன் மகள் ஸ்னோலின் வெனிஸ்டா (17), திரேஸ்புரம் ஜேசுபாலன் மனைவி ஜான்சிராணி (48), சிவந்தாகுளம் சாலை முத்துப்பாண்டியன் மகன் கார்த்திக் (20) ஆகியோர் நேற்று முன்தினம் பலியாகினர். தாளமுத்துநகர் ராம்தாஸ் நகர் சுப்பிரமணியன் மகன் காளியப்பன் (22) என்பவர் நேற்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.

“5 வருடங்களுக்கு யார் ஆட்சி செய்தாலும், முடிந்தவரைக்கும் அவருக்கு ஒத்துழையுங்கள்” - விஜய் ஆண்டனி வீடியோ பேட்டி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x