ஆனைமலை: மது குடித்த இருவர் மருத்துவமனையில் அனுமதி: கள்ளச் சாராயம் குடித்ததாக பொதுமக்கள் தகவல்

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை
Updated on
1 min read

ஆனைமலை: ஆனைமலை அருகே மது குடித்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் கள்ளச் சாராயம் குடித்ததாக பொதுமக்கள் தகவல் தெரிவித்திருக்கும் நிலையில், இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனைமலையை அடுத்த மலை அடிவார கிராமமான மஞ்ச நாயக்கனூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழிலாளிகள். இந்நிலையில், நேற்று (வெள்ளிகிழமை) அப்பகுதியில் டீக்கடை நடத்தி வரும் ரவிச்சந்திரன் (55) அவரது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு ரவிச்சந்திரன் மற்றும் மகேந்திரன் (46) ஆகியோருக்கு வாந்தி வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இருவரையும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்ததால்தான் இருவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வால்பாறை டிஎஸ்பி-யான ஸ்ரீநிதி தலைமையில் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் காயத்ரி ஆகியோர் மஞ்சநாயக்கனூர் கிராமத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறும்போது, “ரவிச்சந்திரனுக்கு ரத்த அழுத்த பாதிப்பால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். மகேந்திரனுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக மது அருந்தவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “ரவிச்சந்திரன், மகேந்திரன், ராமகிருஷ்ணன், ராஜன் என்கின்ற லட்சுமணன், செந்தில்குமார், முத்துக்குமார், எஸ்.செந்தில்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் மாவடப்பு மலை கிராமத்திலிருந்து ஒரு லிட்டர் சாராய பாட்டிலை வாங்கி வந்துள்ளனர். அதை நேற்று ஏழு பேரும் சேர்ந்து கோபால்சாமி மலை அருகே உள்ள ஒரு தோப்பில் வைத்து குடித்துள்ளனர். அதில் ரவிச்சந்திரன் மற்றும் மகேந்திரனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in