Published : 29 Jun 2024 04:15 AM
Last Updated : 29 Jun 2024 04:15 AM

நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு உடனே ஒப்புதல் தர வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: நீட் தேர்வை தேசிய அளவில் முற்றிலுமாக அகற்ற வேண்டும், நீட்விலக்கு கோரிய தமிழக அரசின் மசோதாவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல்அளிக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசினர் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்மொழிந்தார். அவர் பேசியதாவது:

கடந்த 2017-ம் ஆண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட்தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியது. அதன்பிறகு, ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்புஎட்டாக்கனி ஆகிவிட்டது. எனவேதான், நீட் தேர்வு அறிமுகம் செய்ததில் இருந்தே, அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.

முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன்தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலை குழுவின் பரிந்துரைப்படி, கடந்த 2021 செப்.13-ம் தேதி சட்டப்பேரவையில் ‘தமிழ்நாடு மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம்’ என்ற மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், நீண்டநாளாக ஆளுநரால் ஒப்புதல் தரப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது.

இந்நிலையில், 2022 பிப்.5-ம்தேதி அனைத்துக் கட்சி கூட்டம்நடத்தப்பட்டு, அந்த சட்ட மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிப்.8-ம் தேதி சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு மீண்டும் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு ஆளுநரால் அனுப்பப்பட்டது. ஆனால், ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில், அரங்கேறியுள்ள சம்பவங்கள், மாணவர்களின் நம்பிக்கையை நிலைகுலையச் செய்துள்ளன. தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியான தகவல், தேர்வு கண்காணிப்பாளரே விடைத்தாள்களை நிரப்பிய முறைகேடு என பல்வேறு குற்றச்சாட்டுகள், மாணவர்களையும், அவர்களது குடும்பங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய பின்னரே, தேர்வுநடத்தும் தேசிய தேர்வு முகமை(என்டிஏ) தலைவரை மாற்றியுள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிரான தமிழகத்தின் குரல் இன்று இந்தியாவின் குரலாக நாடு முழுவதும் எதிரொலிப்பதை அண்மை நிகழ்வுகள் காட்டுகின்றன.

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகளே முடிவெடுத்த பழைய நிலையை கொண்டுவர வேண்டும் என பிரதமருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர்அகிலேஷ் யாதவ், பிஹார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் என பலரும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளனர். இந்த சூழலில், நமது முயற்சிகளை வெற்றியடைய செய்ய இத்தீர்மானத்தை நிறைவேற்றி தரவேண்டும்.

தீர்மான விவரம்: கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும் வகையிலும், பள்ளிக் கல்வியை அவசியமற்றதாக்கும் வகையிலும், மாநிலமருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் வகையிலும் அமைந்துள்ள நீட்தேர்வு அகற்றப்பட வேண்டும்.

இந்த தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து, பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பெறும் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக, சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு அரசு உடனேஒப்புதல் அளிக்க வேண்டும்.

தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.

இவ்வாறு முதல்வர் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), தி.வேல்முருகன் (தவாக),ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), ஜவாஹிருல்லா (மமக), சதன் திருமலைக்குமார் (மதிமுக), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), நாகைமாலி (மார்க்சிஸ்ட்), ஆளூர் ஷாநவாஸ் (விசிக), ஜி.கே.மணி (பாமக), மனோஜ் பாண்டியன் (ஓபிஎஸ் பிரிவு) ஆகியோர் இதை வரவேற்று பேசினர். தீர்மானத்தை எதிர்த்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து, தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி தருமாறுமுதல்வர் ஸ்டாலின் கோரினார்.அதன்பிறகு, குரல் வாக்கெடுப்புமூலம் தீர்மானம் ஒருமனதாகநிறைவேற்றப்பட்டதாக பேரவை தலைவர் அப்பாவு அறிவித்தார்.

நாமக்கல், தி.மலை புதுக்கோட்டை, காரைக்குடி 4 புதிய மாநகராட்சிகள் உதயமாகின்றன

சென்னை: திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நகரங்களின் அருகே உள்ள பேரூராட்சி கள், ஊராட்சிகளை உள்ளடக்கி புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அறி விக்கப்பட்டது. ஆனால், ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த மக்கள்தொகை, வருமான அளவுகள் அதற்கு தடையாக இருப்பது தெரியவந்தது.

எனவே, அந்த வரையறைகளை தளர்த்தி, மக்கள்தொகை மற்றும் ஆண்டு வருமானத்தை கணக்கிடாமல், மேற்கண்ட 4 நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான நகர்ப்புற உள்ளாட்சி திருத்த சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு நேற்று தாக்கல் செய்தார்.

அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி சட்டப் பிரிவில் மக்கள்தொகையாக இருந்த 3 லட்சம் என்பது 2 லட்சமாகவும், சம்பந்தப்பட்ட பகுதியின் ஆண்டு வருமானம் ரூ.30 கோடியில் இருந்து ரூ.20 கோடியாகவும் குறைக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பொருத்தமென கருதும் எந்த ஒரு காரணத்தையும் கருத்தில் கொண்டு, எந்த ஒரு உள்ளாட்சி பகுதியையும் தேவைக்கேற்ப பேரூராட்சி, நகராட்சி அல்லது மாநகராட்சியாக உருவாக்குவது குறித்து அறிவிக்கலாம் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா இன்று பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x