Published : 29 Jun 2024 06:41 AM
Last Updated : 29 Jun 2024 06:41 AM

இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை: தமிழகத்தில் இ-சேவை மையங்கள் எண்ணிக்கையை 35 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் துறைமானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பதிலளித்து பேசியதாவது:

தமிழகத்தில் தற்போது 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ-சேவைமையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் எண்ணிக்கையை 35 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். மேலும், நகர்புறங்களில் ஒரு கி.மீட்டர் தொலைவுக்குள், கிராமங்களில் 3 கி.மீட்டர்பரப்பளவுக்குள் ஒரு இ-சேவைமையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி செயல்திறன் குறைந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதற்கு காரணம் அதிமுகதான். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை போல மோசமான நிலையில் இருந்த ஒரு நிறுவனத்தை நான் கண்டதில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தபோது கிட்டத்தட்ட அது திவாலாகும் நிலையில் இருந்தது. அந்த நிறுவனம் ரூ.575 கோடி நிதியை நிலுவைவைத்திருந்தது. ரூ.270 கோடி நிதி கேபிள் ஆபரேட்டர்களிடம் இருந்து திரும்பப் பெறப்படவில்லை. மேலும், ரூ.170 கோடி வரை வருவாய் இழப்பைச் சந்திப்பு வந்தது.

தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் அரசு கேபிள் டிவி நிறுவன நிலுவைத் தொகையை ரூ.471 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. தொடர்எச்டி செட்டப் பாக்ஸ் போன்ற திட்டங்களை தற்போது அறிமுகப்படுத்தி வருகிறோம். இந்தச் சூழலில் குற்றச்சாட்டு வைத்து அறிக்கை வெளியிடுவதை அரசியல் கபட நாடகமாகக் கருதுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து துறைசார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு;

தகவல் தொழில்நுட்பவியல் துறையின்கீழ் இயங்கும் நிறுவனங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும். அவற்றின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். சென்னை பெருங்குடியில் 3.6 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.

தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பு மூலமாக மாநிலம் முழுமைக்குமான புவியியல் நில வரைபடம் ரூ.15 கோடியில் உருவாக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசுக் கல்லூரிகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையதள வசதிகள் வழங்கப்படும்.

இதுதவிர தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக குறைந்த கட்டணத்தில் இணையதள தொலைக்காட்சி சேவைகள் சந்தாதார்களுக்கு விரைவில் அளிக்கப்படும். வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஆழ்நிலை தொழில்நுட்பக் கொள்கை வடிவமைக்கப்பட்டு இந்தாண்டு வெளியிடப்படும்.

பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி உட்பட 16 சேவைகள் வழங்கப்பட உள்ளன. மேலும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பன்னாட்டு கணினித் தமிழ் மாநாடு நடத்தப்படும் என்பன உட்பட 14 அறிவிப்புகள் அதில் இடம் பெற்றுள்ளன.

ஸ்டாலின் படம் இல்லாத புத்தகம்: வழக்கமாக துறை அமைச்சர்களால் வெளியிடப்படும் அறிவிப்பு புத்தகங்களில் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் படங்கள் இடம் பெறுவதுண்டு. ஆனால், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிவிப்பு புத்தகத்தில் யாருடைய படமும் இடம் பெறவில்லை.

அதேபோல், அனைத்து அமைச்சர்களும் பதிலுரையில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோரைப் புகழ்ந்து பேசி நன்றி தெரிவிக்கின்றனர். ஆனால், முதல்வர், பேரவைத் தலைவருக்கு நன்றி மட்டுமே தெரிவித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x