

கரூர்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இரு தனிப் படையினர் கேரளாவுக்கு விரைந்து உள்ளனர்.
கரூரைச் சேர்ந்த 7 பேர், போலி ஆவணங்களை கொடுத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தைபத்திரப் பதிவு செய்ய முயன்றதாகவும், இது தொடர்பாக தன்னை சிலர் மிரட்டி வருவதாகவும், மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதனிடையே, இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதிய அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ளார்.
மேலும், அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 25-ம்தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாகபத்திரப்பதிவுத் துறை உள்ளிட்ட இடங்களில் ஆவணங்களை திரட்டும் பணியில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டனர். மேலும், வழக்கு விசாரணைக்காக கரூர் சிபிசிஐடியில் முன்பு பணியாற்றிய அதிகாரிகளை தேர்வு செய்து, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீஸார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தனிப்படை போலீஸார் கேரளமாநிலம் மூணாறுக்கு விரைந்துள்ளனர். இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரும் (55)கைது செய்யப்படலாம் என்று கருதப்பட்ட நிலையில், அவரும் தலைமறைவாகி உள்ளார்.