Published : 29 May 2018 04:23 PM
Last Updated : 29 May 2018 04:23 PM

சிவகங்கை அருகே இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டதில் தலித் சமூகத்தைச் சார்ந்த இருவர் படுகொலை; 6 பேர் படுகாயம்

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கோயில் மரியாதை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியதில் தலித் சமூகத்தைச் சார்ந்த இருவர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் இரு பிரிவினர் உள்ளனர். இதில் பெரும்பான்மையாக உள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த மே 25-ம் தேதி வெள்ளிக்கிழமை கருப்பணசாமி கோயில் திருவிழாவைக் கொண்டாடியுள்ளனர். அப்போது, மற்றொரு பிரிவைச் சேர்ந்த சந்திரகுமார் உள்ளிட்ட தரப்பினர், கோயில் மரியாதை கொடுப்பது தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் சந்திரகுமார் மகன்கள் சுமன், அருண் ஆகியோர் எதிர் தரப்பினரோடு தகராறு செய்துள்ளனர். இதுதொடர்பாக திருப்பாச்சேத்தி போலீஸில் கச்சநத்தத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன்கள் மற்றும் சண்முகநாதன் ஆகியோர் திருப்பாச்சேத்தி போலீஸில் புகார் அளித்துள்ளனர். அவர்களது புகாரில் திருப்பாச்சேத்தி போலீஸார் சந்திரகுமார் மீது வழக்குப் பதிந்து விசாரித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக கச்சநத்தம் கிராமத்திற்குட்பட்ட பழையனூர் போலீஸில் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்துள்ளனர். இதுகுறித்து பழையனூர் போலீஸார் புகார் குறித்து நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுமன், அருண் ஆகியோர் உறவினர்களான ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து பயங்கரமான அரிவாள், வாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கச்சநத்தம் கிராமத்திற்குச் சென்றனர். தாக்குவதற்கு முன்பாக மின் இணைப்பைத் துண்டித்துள்ளனர். பின்னர் கும்பலாகப் பிரிந்து சென்று வீட்டுக்குள் புகுந்து அக்கிராமத்தினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் வீடுகளையும் அடித்து சேதப்படுத்தினர்.

இதில் ஆறுமுகம் (65), அறிவழகன் மகன் சண்முகநாதன் (31), தனசேகரன் (52), இவரது மகன் சுகுமாறன் (23), மலைச்சாமி (60), சந்திரசேகர் (35), தெய்வேந்திரன் (20), மகேஷ்வரன் (18) ஆகிய தலித் சமூகத்தைச் சார்ந்த எட்டு பேரும் ரத்த வெள்ளத்தில் மயங்கினர். இவர்கள் அலறல் சத்தம் போட்டுள்ளனர். பயங்கர ஆயுதங்களுடன் இருந்ததால் கிராமத்தினர் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் மிரட்டல் விடுத்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். படுகாயமடைந்த அனைவரையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதில் மதுரைக்கு செல்லும் வழியில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் ஆறுமுகத்தை திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 7 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில் சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு ராமநாதபுரம் டிஐஜி காமினி, ராமநாதபுரம் எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக பூமிநாதன் மகன் மகேஷ்வரன் புகாரில் பழையனூர் போலீஸார், கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவினரான சுமன், அருண், அவரது தந்தை சந்திரகுமார், இவரது மனைவி மீனாட்சி, இவர்களது உறவினர் இளையராஜா உள்பட 16 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.  

மேலும் இது தொடர்பாக தூத்துக்குடியில் இருந்த சிவகங்கை மாவட்ட எஸ்பி டி.ஜெயச்சந்திரன் திங்கள்கிழமை கச்சநத்தம் கிராமத்தில்  விசாரணை மேற்கொண்டார். இதில் 7 டிஎஸ்பிக்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், திருப்புவனம் அரசு மருத்துவமனை முன்பு ஆறுமுகம் உறவினர்கள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் செய்ய முயன்றனர். இவர்களோடு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே, இருவரது கொலை வழக்கில் தொடர்புடைய கச்சநத்தத்தைச் சேர்ந்த சுமன், அருண், ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்வரன், அக்னிராஜ், அஜய்தேவன், ஆகிய ஐந்து பேர் மதுரை குற்றவியல் நீதிமன்றம் 4-ல் திங்கள்கிழமை சரணடைந்தனர்.

மானாமதுரை டிஎஸ்பி சுகுமாறன் உத்தரவில் பழையனூர் போலீஸார் கொலைக்கு காரணமான சந்திரகுமார் மகன்கள் சுமன், அருண், அவரது தந்தை சந்திரகுமார், இவரது மனைவி மீனாட்சி, மற்றும் உறவினர் இளையராஜா உள்பட 16 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர். இதில் பழையனூர் போலீஸார் 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x