Published : 10 May 2018 07:56 AM
Last Updated : 10 May 2018 07:56 AM

டிவி கேபிளில் மின்சாரம் பாய்ந்து அண்ணன் பலியான வீட்டில் போலீஸார் முன்பு இளைஞர் உயிரிழந்தாரா?

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகன்கள் கணேசன் (40), ராஜூ (35). கொத்தனார் வேலை செய்து வந்தனர்.

கீழ்வேளூர் பகுதியில் நேற்று முன்தினம் மழை பெய்த நிலையில், வீட்டில் இருந்த டிவியின் கேபிள் கம்பியை கணேசன் சரிசெய்தபோது, கேபிளில் பாய்ந்த மின்சாரம் தாக்கியதில் அவர் இறந்தார். இதுதொடர்பாக போலீஸ் விசாரிக்க வந்தபோது பதற்றத்தில் கவனக்குறைவாக அதே கேபிளை தொட்ட ராஜூ பலியானார் என கூறப்பட்டது.

இவ்விரு சம்பவங்கள் குறித்தும் கீழ்வேளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இருவரின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது.

சந்தேக மரணம் என வழக்கு

இந்நிலையில், விசாரணையின்போது, போலீஸாரின் முன்னிலையில் மின்சாரம் தாக்கியதில் ராஜூ உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அது உண்மை இல்லை என கீழ்வேளூர் போலீஸார் மறுத்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியபோது, “நேற்று முன்தினம் காலை 7.50 மணியளவில் டிவி கேபிளை சரிசெய்ய முயன்ற கணேசன் மின்சாரம் தாக்கியதில் உயிருக்கு போராடினார். அப்போது, எந்த ஒயரில் மின்சாரம் பாய்கிறது என அவரது தம்பி ராஜூ டிவி கேபிளை தொட்டார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது.

அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டு கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து, கணேசனின் மனைவி சத்யா அளித்த புகாரின்பேரில், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x