Published : 10 May 2018 05:06 PM
Last Updated : 10 May 2018 05:06 PM

‘ரஜினியின் விளம்பர ஆர்வலர்’- குருமூர்த்திக்கு சுப்பிரமணியன் சுவாமி புதுப் பட்டம்: நெட்டிசன்கள் பதிலடி

ரஜினி குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்த கருத்துக்கு தமிழக அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாஜக முகாமிலிருந்தே அவருக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ரஜினியின் விளம்பர ஆர்வலர் என குருமூர்த்தியை சுப்பிரமணியன் சுவாமி கிண்டலடித்துள்ளார். அவருக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பிறகு அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது. ரஜினி பாஜக ஆதரவாளர் என்ற கருத்து மேலோங்கி வருகிறது. ரஜினியின் கருத்தை பாஜகவினர் ஆதரிக்கும் போது அவரை பாஜக ஆதரவு ஆள் என்று கூறும் நிலை உள்ளது. இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆடிட்டர் குருமூர்த்தி ரஜினிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

அவரது பேட்டியில் “ஒரு கட்சிக்கு தலைமை இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பதை யாரும் மறுக்கவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பும் ஆற்றல் ரஜினிகாந்துக்கு உண்டு. ரஜினியும், மோடியும் இணைந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்பது எனது கருத்து” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார், “ஆடிட்டர் குருமூர்த்தி கணக்கு வேலையை மட்டும் பார்க்காமல், அரசியல் வேலையையும் பார்ப்பவராக உள்ளார். ‘சும்மா கிடக்கும் சங்கை ஊதிக்கெடுப்பது’ போல் சும்மா இருக்கும் ரஜினியை குருமூர்த்தி ஊதிக் கெடுக்க வேண்டாம்'' என்று கருத்து தெரிவித்திருந்தார். ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்துக்கு அதிமுக, திமுக சார்பில் கருத்து தெரிவிப்பது வாடிக்கை.

ஆனால், பாஜக முகாமிலிருந்தே அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆடிட்டர் குருமூர்த்தி கூறிய கருத்தை ஆட்சேபித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் குருமூர்த்தியை ரஜினியின் விளம்பர ஆர்வலர் (Rajini Publicity Activist) என்று கிண்டலடித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் பாஜகவும், கல்வி அறிவற்ற ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற பிரச்சாரத்தின் பின் பெரிய அளவில் பணபலம் உள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் ரஜினி பற்றிய குருமூர்த்தியின் பதிவுக்கு பதிலளித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ''ஊடகத்தினர் ஆடிட்டர் குருமூர்த்திய ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி என்றழைக்கின்றனர், ஆனால் அவரை ரஜினியின் விளம்பர ஆர்வலர் என்று அழைப்பது சிறப்பாக இருக்கும்'' என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு அவருக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். சரியான பதிவு என சிலர் பதிவு செய்துள்ளனர்.

ராஜா ஹிந்துஸ்தானி என்பவர் செய்துள்ள பதிவில் “ரஜினி தமிழ்நாட்டில் உள்ளவர்களில் பலரையும் விட சிறந்தவர், அவர் திராவிட அரசியலை அகற்றுவார். நீங்கள் இதற்கு உதவாவிட்டாலும் தயவு செய்து அதை கெடுக்காமல் இருங்கள். நீங்கள் இந்தியாவுக்கான அரசியல்வாதி. இது தமிழ்நாட்டு அரசியல், உங்கள் டீ கப்பில் தமிழ்நாட்டு அரசியல் கிடையாது” என்று வாஜ்பாய் அரசை கவிழ்த்ததை நாசுக்காக குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார்.

ஆனந்த்குமார் என்பவர் பதிவில் “சுப்பிரமணியம் சார், அவருக்கு உரிய மரியாதை கொடுங்கள், அவர்கள் மற்றவர்களை விட சிறந்தவர்கள். நீங்கள் தனியானவர், எல்லாவற்றையும் சாதிக்க முடியாது. அவர்களை செயல்பட விடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோஹன் குமார் என்பவர் பதிவில் கூறியிருப்பதாவது “நீங்கள் தமிழ்நாட்டில் பிரபலம் இல்லை. ஆகவே இதை நீங்கள் ஏற்றுக்கொண்டுத்தான் ஆகவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்பே சிவன் என்பவர் ப “உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன், அவரை இனி ஆர்பிஏ (ரஜினி பப்ளிசிட்டி ஆக்டிவிஸ்ட்) என்று அழைக்கலாம். இருவரையும் சேர்த்து மோடி சப்போர்ட்டர்ஸ் என்று அழைக்கலாம்” என்று கூறியுள்ளார்.

யாராவது சசிகலா பப்ளிசிட்டி ஆர்வலர்கள் இருக்கிறீர்களா என்று ஒருவரும், ரஜினியை சப்போர்ட் செய்வது சசிகலாவை சப்போர்ட் செய்வதை விட சிறந்தது என்று ரவிஷங்கர் என்பவரும் தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பலரும் ரஜினி மேல் உங்களுக்கு என்ன அவ்வளவு கோபம் என்ற ஒரே கேள்வியை கேட்டுள்ளனர்.

மொத்தத்தில் ரஜினியை ஆதரிப்பதில் இருவேறு கருத்துகள் பாஜக நிர்வாகிகளிடையே உருவாகியுள்ளதையே இது காட்டுகிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x